Thursday, April 16, 2009
ரஜினியும் ஹேர் ஸ்டைல்களும்
ஆரம்ப காலப் படங்களில் சிலவற்றில் ரஜினி முடி அலங்காரத்தை தனது கேரக்டருக்கு ஏற்ப கொஞ்சம் மாற்றவும் செய்தார் .
முரட்டுக் காளை படத்தில் கொஞ்சம் வித்யாசமான முடி அமைப்பு தான்
எங்கேயோ கேட்ட குரல் என்றொரு படம் ...கமலின் "சகல கலா வல்லவன் " உடன் வெளியான படம் ,அம்பிகா,ராத என இரண்டு கதாநாயகிகள் ரஜினிக்கு அந்தப் படத்தில் ரஜினிக்கும் முடி அலங்காரம் வழக்கமான படி களைந்து பறக்காமல் ஒரு கிராமத்து அமைதியான குடும்பத் தலைவனை சித்தரிக்கும் வகையில் .
கமலும் சகல கலா வல்லவனில் குடுமி வைத்துக் கொண்டு நடித்தார் ,
மூன்று முகம் படத்தில் இன்னும் கொஞ்சம் வித்யாசம் காட்டினார் ஹேர் ஸ்டைலில் .மகன் ரஜினிக்கு ஒரு ஸ்டைல்..அப்பா ரஜினிக்கு ஒரு ஸ்டைல். பிக் பாக்கெட்டாக வரும் தம்பிக்கும் ஒரு ஸ்டைல் .
நெற்றிக் கண் படத்திலும் அப்படியே மாற்றம் கொஞ்சம் இருந்தது .
பாபாவிலும் மாறுதல் காட்டினார் தான் .
ஆனால் எல்லாப் படங்களோடு ஒப்பிட்டாலும் கூட சிவாஜியில் ரஜினியின் ஹேர் ஸ்டைல் மற்றும் ஒப்பனைகளோடு வேறு எந்தப் படத்தையும் ஒப்பிட முடியவில்லை.அத்தனை காட்சிகளிலும் ரஜினியின் இளமை மீட்டு எடுக்கப் பட்டதைப் போல அருமையான ஹேர் ஸ்டைல் மற்றும் ஒப்பனைகள்.
"சகானா சாரல் ....பாடலிலும்
"வாஜி...வாஜி...சிவாஜி....பாடலிலும் ரஜினிக்கு நிகர் ரஜினியே தான் .
சிகை அலங்காரம் என்பது இப்படி பொருந்தி அமைந்து விடுதல் நடிகர்களில் ரஜினிக்கு அதிர்ஷ்டமே ...சத்யராஜ் ஆரம்பம் முதலே விக் வைத்து நடித்தாலும் அது பொய் முடியாகத் தோன்றியதில்லை. அப்படித் தான் ரஜினிக்கும் எத்தகைய சிகை அலங்காரமும் அலட்டலாக தெரிவதில்லை .
சிலருக்கு தங்களது ஒரிஜினல் ஹேர் ஸ்டைல் இழந்த பின் விக் பொருத்தமாக இருப்பதே இல்லை ..உதாரணம் விஜய் காந்த் ...கார்த்திக் ...பிரபு .
Sunday, December 14, 2008
காணாமல் போன நடிகைகள்...!
அந்தப் படம் குறித்த விமர்சனத்தில் தான் மேற்கண்ட கிளி கொஞ்சல் பாராட்டைப் பார்த்தேன்.அத்தனை அழகான நடிகை மட்டுமல்ல நடிக்கவும் தெரிந்த நடிகை தான் என்பதை சுவரில்லாத சித்திரங்களில் காணலாம்.பிறகு ஏன் அவர் நிறைய படங்களில் தலை காட்டவில்லை என்று தெரியவில்லை.இதே நடிகையை கே.பி. யின் "பாமா விஜயத்தில் " பார்த்திருக்கிறேன்.
"வரவு எட்டணா...செலவு பத்தணா...
கடைசியில் துந்தனா...துந்தனா...துந்தனா..."
என்று சிறுமியாக வந்து ஆடுவார்.அவர் நடித்த வேறு படங்கள் எதுவும் எனக்கு ஞாபகம் இல்லை .
அதே போல "அருந்ததி" என்றொரு நடிகை .பெரும்பாலான படங்களில் ஹீரோயினின் தோழியாகவோ அல்லது ஹீரோவின் தங்கையாகவோ வருவார்.பாரதி ராஜாவின்"புதுமைப் பெண்ணில்" பிரதாப் போத்தனின் தங்கையாக வந்து வில்லன் ராஜசேகரால் மானபங்கம் செய்யப்பட்டு கடைசியில் தற்கொலை செய்துகொள்வார்.
"விதி" படத்தில் கூட பூர்ணிமாவின் வழக்கைப் பற்றி பாக்கியராஜிடம் செய்தி சேகரிக்கும் நிருபராக வருவார்.
இதே போல கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்த "தாரா"
சோலைப் புஷ்பங்களே ...என் சோகம் சொல்லுங்களேன் "
என்று முரளியுடன் ஒரு படத்தில் பாடுவார் அவரே தான் .அவரை அதற்குப் பின்" பறவைகள் பலவிதம்" படத்தில் ஜனக ராஜின் ஜோடியாகப் பார்த்த ஞாபகம். இவரே தான் "அக்னி நட்ச்சத்திரம்" படத்தில் கார்த்திக்கின் தங்கையாக வருவார் .
இவர்களைப் போலவே "இதயத்தைத் திருடாதே " படத்தின் நாயகி பெயர் நினைவிலில்லை.அந்த ஒரு படத்தோடு சரி பிறகு அவரைக் காண முடியவில்லை.
"ஓ ...ப்ரியா ...ப்ரியா...என் ப்ரியா...ப்ரியா..." எங்கே போனாரோ?!இவர்களோடு கமலின் குணா படத்தில் வரும் "ரோகினி"
"கண்மணி அன்போடு ககாலன் நான் எழுதும் கடிதமே " அவரே தான் அவரையும் அந்த ஒரு படத்தோடு காணோம்;இவர்கள் அனைவருமே அழகாய் இருப்பதோடு ஒரு சில படங்களே நடித்திருந்தாலும் கூட நினைவில் நின்றவர்கள் .
எங்கே போனார்கள் இந்த நடிகைகள் ?
யாருக்காவது ஏதாவது சேதி தெரிந்தால் இங்கே பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
அதோடு இந்தப் பதிவு வாசிக்கப் பிடித்திருந்தால் உங்களது வாக்குகளையும் மறவாமல் அளியுங்கள் .
Saturday, December 13, 2008
ரங்காராவ் என்றொரு அற்புத நடிகர்...
ரங்காராவ்
அன்றைய ரங்காராவுக்கு இணையாக இப்போதுள்ள குணச்சித்திர நடிகர்கள் எவரையாவது சொல்ல முடியுமா?இத்தனைக்கும் அவர் தமிழ் நடிகர் அல்ல,தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்தவர் .தமிழில் தான் எத்தனை அருமையான படங்களில் நடித்து விட்டார்?!
எங்க வீட்டுப் பிள்ளையில் சரோஜா தேவிக்கு அப்பா.
கற்பகம் படத்தில் கே.ஆர் விஜயாவுக்கு அப்பா ,
பால நாகம்மா தெலுங்கில் மந்திரவாதியாக வில்ல நடிப்பு வேறு...!
வீர அபிமன்யூவில் கடோத்கஜன் ...;
"கல்யாண சமையல் சாதம்
காய்கறிகளும் பிரமாதம்
இது கௌரவப் பிரசாதம்
இதுவே எனக்குப் போதும்...ஹா ...ஹக்க...ஹக்க...ஹக்கா"
மறக்க முடியுமா இந்தப் பாடலை ?
ரஜினி ...கமல் தலைமுறையில் கூட ரங்காராவ் சகாப்தம் இல்லை .அவர் எம்.ஜி.யார் ,சிவாஜியோடு முடித்துக் கொண்டவர் .
அப்படியும் கூட இன்றும் "கல்யாண சமையல் சாதம் ..." பாடல் பிரபலம் தான் என்று நினைக்கிறேன் .
பாசமான ..பணக்கார அப்பா கேரக்டருக்கு சாலப் பொருந்திய ஒரே நடிகர் அவர் மட்டும் தான் . அதற்குப் பிறகும் கூட நாம் எத்தனையோ சினிமா அப்பாக்களைப் பார்த்து விட்டோம் தான் .இந்த அளவுக்கு யாரும் மனதில் நின்றதாகத் தெரியவில்லை.அவரது இந்த வெற்றிக்குக் காரணம் எப்போதும் மிதமான நகைச் சுவை இழையோடும் பேச்சும் ...அப்பாவித்தனம் கலந்த கம்பீர முக பாவமுமாகத் தான் இருக்க வேண்டும்.
நீண்ட நாட்களாக அவரைப் பற்றி நாலு வரி எழுதியே ஆகா வேண்டும் என்ற எனது ஆசை இன்று எதோ சுமாரான அளவில் பூர்த்தி ஆனது.
இந்தப் பதிவை வாசிப்பவர்கள் ரங்கா ராவ் ரசிகர்களாக இருந்தால் மறக்காமல் உங்களது ரசனையை பின்னூட்டம் இடுங்கள் .
Tuesday, December 2, 2008
தாம்பத்யம்...!?
நீயும்
நானும்
சொல்ல
நினைத்துச்
சொல்லாமலே விட்ட
அந்தப் பல சொற்களில்
தான்
நித்தம்
என்னோடு
நீ
வாழ்கிறாய் !
உன்னோடு
நான்
வீழ்கிறேன்!
நானே நானா ...யாரோ தானா?!
நான்
நானாகி வாழ
ஆசைப்பட்ட போது
எனக்கு நானே
யாரோவாகிப் போயிருந்தேன் ;
என் பெயரின்
முன்னும்
பின்னும்
யாரோ குடியிருந்தார்கள் ;
குடியிருக்கிறார்கள் ;
முன்பு
அப்பா ;
பின்பு
கணவர்;
ஆம் ...
உங்களுக்கும் தெரிந்தே இருக்கலாம் ...!
நிர்மலா பெரியசாமி
கமலா செல்வராஜ்
அனிதா ரத்னம் ...
இப்படித்தான் நானும் ....
மலர்விழி மதுசூதனன் ஆனேன்?!
இதனால்
ஒன்றும்
இன்றெனக்கு
பெருத்த சந்தோசமேதுமில்லை
சிறுத்த துக்கமுமில்லை
சின்னதாய்
ஒரு சந்தேகம் மட்டுமே!!!
பின்புறம் நீள்வது
வால் என்றால்
முன்புறம் ஒட்டிக்கொண்டது
தும்பிக்கையா?
தேவையா இந்த ஆராய்ச்சி ?
என்று சிலர் நினைக்கிறீர்கள் தானே ...!
அவர்களுக்குச் சொல்லத் தோன்றியது இதை ;
சரி விடுங்கள்
நான் ஒன்றும்
வாலில்லாக் குரங்கும் அல்ல!
தும்பிக்கையில்லா யானையும் அல்ல !
நான் என்றும் நானே!
என் வீட்டில்
என்னுலகில்
எல்லாம் நானே ;
நாணில்லாத நான் ...
நானே!!!
நானே நானா யாரோ தானா?!
Sunday, November 30, 2008
குன்று குளிர் கூதிர் காலம் ...?!
Sunday, November 23, 2008
நடை பாதைச்சிறுவர்கள்
களைந்து
பரவும்
மேகப்பொதிகள்
வைகறையிலும்
யாமத்திலும்
சிதறித் தெறிக்கும்
மழைச் சொட்டுக்கள்
ரசிப்பதற்கு
இருக்கலாம்
இத்தனை ...
புசிப்பதற்கு
என்ன வழி ?
தினம் தினம்
தேடிக்கொண்டே அலைகிறோம்
நடைபாதைச் சிறுவர்கள்
நாங்கள்!!!