Thursday, October 30, 2008

ஈழம் -சில வரலாற்று உண்மைகள்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் நல்லாட்சி நடத்திய தமிழ் மன்னன் எல்லாளன் ,ஈழத்தை ஆண்ட கடைசி மன்னனது பெயர் சங்கிலியன் ,போர்த்துகீசியருக்கு இணங்கிப் போக மறுத்ததால் சங்கிளியனைச் சிறை பிடித்து கோவாவில் தூக்கிலிட்டனர் .ஈழத் தமிழர்களது சொந்த மண்ணில்தான் சிங்களர்கள் தஞ்சம் புகுந்தனர் ,இதைச் சிங்களரின் வரலாற்று நூலான மகா வம்சத்தில் காணலாம்.கி.மு.ஐநூரில் விஜயனும் அவனுடைய நண்பர்களுமாக ஏழு பேர் கலிங்க நாட்டிலிருந்து (தற்போதைய ஒரிஸ்ஸா ) இலங்கைக்கு வந்தனர் என்றே சிங்களர் வரலாறு தொடங்குகிறது .
இந்த விஜயனைப் பற்றி ஒரு குறிப்பு :--
இவன் பெற்றோருக்கு அடங்காமல் திரிந்தவன் ,கொடுஞ்செயல் புரிவதற்கும் தயங்காதவன் ,இதனால் மக்களின் வெறுப்புக்கு ஆளானான் ,தந்தையால் அடித்து விரட்டப்பட்ட இவனுக்கு யாரும் ஆதரவு தராததால் நாடோடியாய் அலைந்து திரிந்து காசிக்குப் போய் தங்க வேண்டியதாகி விட்டது . இதன் பின்னர் தான் கடல் வழியாகப் பயணித்து 'தம்பாபணி'(தாமிரபரணி என்பதன் திரிபு) என்கிற தமிழ் ஊரில் கரை ஏறியிருக்கிறான் .இவன் இலங்கை வந்து இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் நிறைவு பெற்றதை நினைவூட்டும் வகையில் ஸ்ரீலங்கா சிங்கள அரசாங்கம் ஒரு அஞ்சல் தலையை வெளியிட்டது .
அந்த அஞ்சல் தலை :-



அதில் விஜயன் ஒரு தோணியில் வந்து இலங்கைக் கரை ஏறி வருவதையும் ,அங்கிருந்த பூர்வீகத் தமிழ்க்குடிப்பெண்ணான குவேனி ஒரு மரத்தின் கீழ் அமர்ந்திருப்பதையும் சித்தரித்திருந்தனர் .இதன் மூலம் தமிழர்களே பூர்வீகக் குடிமக்கள் ,தோணிகள் ஏறி வந்தவர்கள் சிங்களர்களே என அவர்களே ஒப்புக் கொள்கிற வகையில் இருக்கிறது என்பதால் அஞ்சல் தலையை அவசரம் அவசரமாகச் சிங்கள அரசு திரும்பப் பெற்றுவிட்டது .விஜயன் வந்ததற்குப் பிறகு தமிழர்களுக்கு தொடர்ந்து தொல்லைகள் கொடுக்கவே கி.மு.நூற்று எழுபதில் சோழ மன்னன் இலங்கை மீது போர் தொடுத்து அவனை அடக்கி வைத்தான் என்கிறது வரலாறு.ஐரோப்பியர் இலங்கைக்கு வரும் வரை தமிழ் மன்னர்களது கட்டுப்பாட்டில் தான் சிங்களர்கள் இருந்தனர்.பின்னர் காலப்போக்கில் ஏற்ப்பட்ட மாறுதலால் தென்னிலங்கையில் சிங்களர்களும் வடகிழக்கு தமிழர் பகுதிகளில் தமிழர்களும் ஆட்சி செய்தனர்.ஆனால் பிரித்தாலும் சூழ்ச்சிக்குப் பெயர் போன ஆங்கிலேயர்கள் ஆயிரத்து எண்ணூற்று எண்பத்து மூன்றில் தமிழர் ஆட்சியைக் கலைத்து சிங்களர் கையில் சட்டசபை நிர்வாகத்தை ஒப்படைத்தனர் .இது தான் சிங்கள ஆதிக்கம் காலூன்றுவதற்கு காரணமாக இருந்தது.சிங்கள விஜயன் இலங்கைக்கு வரும் முன்னர் இலங்கை முழுவதும் தமிழர்களே பரவி இருந்தனர் என்பதை நாம் அங்கு பண்டைய காலத்தில் இருந்த பழம் பெரும் சிவன் கோயில்கள் மூலமாக அறியலாம் . கிழக்கில் திருக்கோணேஸ்வரம், மேற்கில் திருக்கேதீஷ்வரம் ,வடக்கில் நகுலேஸ்வரம் ,தெற்கில் முன்னேஷ்வரம் என்கிற சிவ வழிபாட்டுத் தலங்கள் இருந்தன.இன்றைக்கும் இந்தக் கோயில்கள் இலங்கையில் இருக்கின்றன ஆயினும் அதன் பழம் பெருமையினை அடுத்தடுத்த அன்னியப் படை எடுப்புகள் ஒவ்வொன்றிலும் இழந்து விட்டு தற்போது சீரமைக்கப் பட்ட கோயில்களாக அவை காட்சி அளிக்கின்றன .கி.பி ஆயிரத்து அறுநூறு முதல் ஆயிரத்து தொள்ளாயிரம் வரையிலும் தொடர்ந்து இலங்கையின் மீது போர்ச்சுகீசியர்கள் ,டச்சுக்காரர்கள் அதன் பின் ஆங்கிலேயர்கள் அவர்களின் பின் சிங்களர்கள் என அனைத்து தரப்பினரும் தங்களது ஆதிக்கத்தை அங்கே நிறுவுவதன் பொருட்டு ஈழத்தை துண்டாடினர் .இதனால் சீரழிந்தவையே மேற்கூறிய சிவாலயங்கள் .


திருக்கோணேஸ்வரம் ஆலயம் (இன்று ):-


இது மட்டும் அல்ல கல்கியின் பொன்னியின் செல்வன் பெரும்பாலும் கற்பனை கலந்த நாவல் என்றாலும் அதிலும் பல உண்மைச் சம்பவங்கள் உள்ளன . மஹிந்தன் என்ற சிங்கள மன்னன் தன் தகப்பனைக் கொன்று விட்டு ஆட்சிக்கு வந்த செய்தி வரலாற்று உண்மையே ,அந்த மகிந்தனின் வம்சாவழியினரான இன்றைய மஹிந்த ராஜ பக்க்ஷேக்கள் இனப் படுகொலைகளுக்கு இராணுவம் மூலம் உத்தரவிடுவதில் பெரிய வியப்பு ஒன்றும் இல்லை . வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இலங்கை தமிழகத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது ,தமிழகமும் இலங்கையும் சேர்ந்திருந்த நிலப் பகுதிக்கு "குமரிக்கண்டம்" என்ற பெயர் வழங்கிற்று ,இந்த நிலப்பகுதியை கடல் கொண்ட பின்னர் இலங்கை தனி தீவாக துண்டிக்கப் பட்டது ,இதை மென்டிஸ் என்கிற இலங்கை வரலாற்று ஆசிரியரும் குறிப்பிட்டுள்ளார் .இந்த குமரிக்கண்டமே "லெமூரியா கண்டம் என்றும் அந்நாளில் அழைக்கப் பட்டுள்ளது .

அதற்கான ஆதார வரை படம் :-








Wednesday, October 29, 2008

குஷ்பூவுடன் ஒரு நேர்காணல்


என் துபாய் நண்பர் ஒருத்தரோட பாஸ் அவர்கிட்ட ஒரு கேட்கக் கூடாத கேள்வியக் கேட்டுட்டார் .

வாட் இஸ் திராவிடியன் கல்ச்சர் ? கேன் யு எக்ஸ்ப்ளைன் மீ ?அவருக்கு பதில் சொல்லத் தெரியலை சும்மா லெமூரியாக் கண்டம் ...தமிழ் சங்கம் ...கடல் கோளினால் பழைய குமரிக்கண்டம் அழிஞ்சு போச்சு,அப்படி இப்படின்னு மழுப்பிட்டு வந்துட்டாராம் .அவர் எஸ்கேப் ஆயிட்டு போகட்டும் .உண்மைல விவரம் தெரிஞ்சவங்க எக்ஸ்ப்ளைன் பண்ணுங்கப்பா ,

திராவிடக் கலாச்சாரம்னா என்ன ? குஷ்பூ கற்பு பத்தி பேட்டி கொடுத்த உடனே விளக்குமாத்தை தூக்கிட்டுப் போய் அந்தம்மாவை கோர்ட்ல வரவேற்ப்பு பண்ணினாங்களே அது தான் திராவிடியன் கல்ச்சரா? இல்ல இப்போ ஏதோ

"குமுதம் ரிபோர்டர்ல படிச்சேன் ... "டேட்டியோ" டேட்டிங் + வீடியோ =டேட்டியோ கல்ச்சர்னு

ஒன்னு பரவிட்டு இருக்காமே ஐ.டி இளைஞர்கள்கிட்ட அதுக்கும் திராவிடியன் கல்ச்சருக்கும் எதாவது ரத்த சம்பந்தம் இருக்குமோ ?இப்படி எல்லாம் பயங்கரக் குழப்பமாயிடுச்சு ,

விவரம் அறிந்தவர்கள் எனது இந்தக் கேள்விக்கு தங்களுக்குத் தெரிந்தவரையில் பதில் கூற முயற்சி செய்யுங்கள் .

ப்ளாக் எழுத ஆரம்பித்து ஒரு வாரம் கடந்து விட்டது ,இன்னும் ஒரு கமென்ட் கூட இல்லை என் பக்கங்களில் ...நாங்களும் இருக்கோமில்ல ...அது உங்களுக்கும் (மற்ற பதிவர் நண்பர்களுக்கு ) தெரியனுமில்ல ...அதான் நண்பர் புதுகை .அப்துல்லா பாணியில ஒரு டைட்டில் வச்சி பார்த்த என்னனு இறங்கினதுல கிடைச்ச நெட் ரிசல்ட் தான் மேல நீங்க படிச்சது ஒரு முக்கியமான விஷயத்த மறந்துட்டேன் எனக்கு முன்னாடி வந்து இங்க பழம் தின்னு கொட்டைபோட்ட மூத்த பதிவர்களுக்கு வணக்கம் ...வந்தனம் ;

முக்கிய அறிவிப்பு :-இந்தப் பதிவை யாரேனும் படித்து பிறகு பின்னூட்டமும் இட்டால் அவர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் ...

வழங்குவோர் ---மூத்த பதிவர்கள் சங்கம்


Tuesday, October 28, 2008

டெல்லி நண்பனும் அவனது சஸ்பென்ஸ் காதலும் ...(என்ன தான் நடந்திருக்கும்?)




அவனது பெயர் ராகேஷ் மாலிக் ,அவனை முதலும் கடைசியுமாக பல்கலைக்கழக ப்ராஜெக்ட் வகுப்புகளின் போது தான் பார்த்தேன் .அது ஒரு எட்டு நாள் பயிற்ச்சி முகாம் ,முதல் மூன்று தினங்கள் அவனை எனக்கு அவ்வளவாகப் பரிச்சயமில்லை . அவன் எனக்குப் பின் வரிசையில் வடநாட்டு மாணவர்களுடன் சேர்ந்து அமர்ந்திருந்தான் , எங்கள் குழுவில் இருந்த சிவா மூலமாக நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது அவன் ...அந்த ராகேஷ் எனக்குஅறிமுகமானான் ,வட இந்திய இலக்கணம் தப்பாமல் கோதுமை நிறத்தில் ககலப்பான நடையில் நிறைய இந்தி கொஞ்சம் ஆங்கிலம் தப்பு தப்பான தமிழில் எங்களுடன் உட்கார்ந்து கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தான் அன்றைக்கு ,பேச்சு இது தான் என்றில்லாமல் அது பாட்டுக்கு உருண்டு புரண்டு திசை மாறிப் போய்க் கொண்டே இருந்து , கடைசியில் அவனுக்கு தமிழ் பாடம் எடுப்பதில் போய் நின்றது .தமிழில் எத்தனை எழுத்துக்கள் என்று அவன் கேட்டான் ...என்னுடன் இருந்தவர்கள் எல்லோரும் இருநூற்று நாற்பத்தி ஆறு என்றார்கள் சிவா அது தவறு மொத்தம் இருநூற்று நாற்பத்தி ஏழு என்றார் ...அவன் ஹிந்தி எழுத்துக்கள் பிறகு ஹிந்தி சினிமா பற்றி ஏதோ சொன்னான் ...பேச்சு இப்படியே நழுவ ,நான் அவன் அணிந்திருந்த கூலிங் க்ளாசைப் பார்த்துக் கொண்டிருந்தேன் .அவன் இரண்டொருமுறை அதைக் கழற்றி நம் ரஜினி மாதிரி செய்து காட்டினான் .இதுவரை அவன் பேசியதிலிருந்து அவனுக்கு தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ரஜினி இட்லி ,சாம்பார்(இது ரஜினியை விடவும் நன்றாகத் தெரியுமாம் )ஜெயலலிதா மட்டுமே தெரியும் என்று புரிந்தது ,ஜெயலலிதாவைக் கூட அவனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை அப்போது வாஜ்பாயி இந்தியப் பிரதமராயிருந்த காலகட்டம் அன்றைக்கு நம் ஜெயலலிதா மேடம் வாஜ்பாயி கவர்மென்ட்டை கலங்கடித்த பரபர செய்திகள் வராத இந்திய பத்திரிகைகளே இல்லை எனலாம் , இப்படித்தான் அவனுக்கு ஜெயலலிதா பரிச்சயமாம் ,சரி விசயத்திற்கு வருகிறேன் ,நான் பயிற்ச்சி வகுப்புக்கு என் சித்தி வீட்டிலிருந்து போய் வந்து கொண்டிருந்தேன் ,வெறும் எட்டு நாட்களுக்குப் போய் ஹாஸ்டலில் தங்குவானேன் என்று தான் அண்ணாநகர் சித்தி வீட்டிலிருந்து மதுரை காமராஜர் பல்கழைகழகம் வரை பஸ்ஸில் போய் வந்தேன் ,ஐந்தாம் நாள் நான் ஏறி அமர்ந்த பஸ்ஸில் ராகேஷும் இருந்தான் ,உட்கார்ந்த பிறகு தான் பார்த்தேன் ,பஸ்ஸில் நிற்கக் கூட இடமில்லை கச கசவென கூட்டம் நிரம்பி வழிந்தது ,அவன் என்னைப் பார்த்து கை அசைத்து புன்னகைத்தான் ,நான் பதிலுக்கு சின்னதாக சிரித்து விட்டு ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டேன் ,அவ்வளவு கூடத்தில் அவனைப் போல நானும் கையா அசைத்துக் கொண்டிருக்க முடியும் ,மதுரை மக்களைப் பற்றி எனக்குத் தெரியாதா என்ன? எதற்கு வம்பு என்று தான் ,ஒரு வழியாக ஒரு மணி நேரம் கழித்து பல்கலைக்கழக நிறுத்தம் வரவே நானும் ...எனக்குப் பிறகு அவனுமாக இறங்கினோம் , ஏற்க்கனவே லேட் ...அவனுடன் அப்புறம் பேசிக் கொள்ளலாம் முதலில் அட்டண்டன்சில் கையெழுத்துப் போட வேண்டுமே இல்லா விட்டால் ஆப்சென்ட் ஆகி விடும் என்று நான் வேகமாய் நடந்து கொண்டிருந்தேன் .அவன் ஒன்றும் கேட்காமல் என்னை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான் .ஒரு வழியாக காலை கிளாஸ் முடிந்து உணவு இடைவேளை வந்தது ,சாப்பிடலாம் என்று டிபன் பாக்ஸ் திறந்த போது ராகேஷ் எதிரில் வந்து அமர்ந்தான் ,அப்போது தான் அவன் அவனது கதையை (ஆமாம் கேட்க கதை போல தான் இருந்தது எனக்கு ) என்னிடம் சொல்லத் தொடங்கினான் .அவனைப் பற்றி ...அவனது அம்மா ..அப்பா பற்றி ;அவனது படிப்பைப் பற்றி ...( டெல்லி பல்கலைக்கழகத்தில் எல் .எல்.பி முடித்து விட்டு ப்ராக்டிஸ் செய்து கொண்டே பகுதி நேரமாக எம்.ஏ இதழியல்) அவன் பிறந்த பிவானி பற்றி (இது டெல்லிக்கு அருகில் சண்டி காரில் இருக்கும் ஒரு ஊர் ..இது தான் அவன் பிறந்த ஊராம்) அதே ஊரில் தான் யோகிதாவும் பிறந்தாளாம் ;இருவரும் பி.ஏ ஆங்கில இலக்கியம் சேர்ந்து படித்தார்களாம் அதாவது ஒரே கல்லூரியில் ,எப்படியோ காதல் வந்துவிட்டது (எப்படி வந்தது என்றும் அவன் சொன்னான் அவனது ஆங்கிலம் அப்போது எனக்கு அவ்வளவாகப் புரியவில்லை ...)பிறகு இவன் எல்.எல்.பிக்காக டெல்லி வந்ததும் அவள் ஹோம் சயின்ஸ் படிக்கப் போய்விட்டாளாம் ,ஆனாலும் காதல் ஓய்ந்து போகவே இல்லை .அது அது பாட்டுக்கு விடுமுறை நாட்களில் திடமாக வளர்ந்து ...வளர்ந்து இப்போது தெளிவாய் தெரிந்து விட்டதாம் இருவருக்கும் ஒருவர் இன்றி மற்றொருவர் வாழவே முடியாதென்று ,எதற்கு இவன் இதையெல்லாம் நம்மிடம் சொல்கிறான் என்ற பிரமையில் இருந்த நான் ஒன்றும் பேசமால் அவன் சொல்வதை வெறுமே கேட்டவாறு இருந்தேன் இதுவரையிலும் ;அவன் தொடர்ந்து இருவருமே மேஜர் தான் ஆனாலும் எங்களது காதல் திருமணத்தில் கை கூடுமா என்ற கவலையில் இருக்கிறேன் நான் என்றான்,இப்போது தான் லேசாக சுரணை வந்தது போல ;ஏன் ? என்றேன் ,மீதிக் கதையை நான் அடுத்த பதிவில் சொல்கிறேன்

Saturday, October 25, 2008

சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையிலும்...!



சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையிலும்
பூக்கள் செழித்தே வளர்கின்றன ;

பூக்களுக்குத் தெரிய

நியாயமில்லை

சுடுகாட்டின் மரண ஓலம்

ஆதலினால்
சுடு காட்டுக்குச் செல்லும் பாதையிலும்

பூக்கள் செழித்தே மலர்கின்றனவாம் ..!

இது தேவையா ?

வை.கோ கைது ...சீமான் ...அமீர் கைது ...இதெல்லாம் தேவையா கலைஞரே!!!

Friday, October 24, 2008

அவ்வளவு ஈசியா என்ன ?








எழுத வேண்டுமென்றால் எதை எதையோ எழுதலாம் ,உட்கார்ந்து (இது ரொம்ப முக்கியம் )ஒரு இடத்தில் உட்கார்ந்து பொறுமையாக விஷயங்களை எழுத வேண்டுமே...அது ரொம்ப அவஷியமாயிற்றே,கற்பனையில் உதிக்கும் விஷயங்களோ அல்லது நேரில் பார்த்து பாதித்த விஷயங்களோ எதுவாய் இருந்தாலும் கோர்வையாய் ரசனை குறையாமல் எழுத்தில் கொண்டு வருவது என்பது சாமான்ய காரியமில்லையே ,இதனால் என்னுடைய எழுதும் ஆர்வம் வெகுநாட்களாய் தள்ளிக் கொண்டே போயிற்று ;


ஒருவழியாய் எழுதலாம் என்று பேனாவைத் தேடினால் அதைக் காணோம் .பென்சிலில் எழுதலாம் தான் ...ஆனால் சீக்கிரத்தில் அழிந்து விடும்,மைபேனா எங்கோ ஒரு மூலையில் தட்டுப்பட்டது ...எப்போதோ அம்மாவின் சின்ன வயதில் வாங்கிய பேனா ;ரொம்பப் பழசாய் கொஞ்சம் அழுத்தி கழுத்தைப் பிடித்து எழுத ஆரமித்தால் உடைந்து பொய் பேப்பரில் மை கொட்டிவிடுவேன் என்று பயமுறுத்திக் கொண்டு மேஜை டிராயரில் என்னைப் பார்த்து நக்கலாய் சிரித்தது .இப்போதெல்லாம் அதுவும் இந்த இரண்டாயிரத்து எட்டில் எந்த அறிவாழி மை பேனா யூஸ் பண்ணுகிறது ? பேனா என்றால் ரேனால்டோ அல்லது ஜெல் பேனாவோ தான் ,


ம்ம்ம் ...அதைத்தான் ரெண்டு நாட்களாய் தேடிக் கொண்டிருக்கிறேன் வீட்டில் எல்லா இடத்திலும் இன்னும் கிடைத்தபாடில்லை , கிடைத்தால் உடனே எழுத ஆரம்பித்து விடுவேன் ,


கிடைக்க வேண்டுமே ...கிடைக்கும் ...கிடைக்கும் ;அதுவரை என்ன செய்யலாம் ?ஏதாவது செய்து தானே ஆக வேண்டும் ? "கழுதை கெட்டால் குட்டிச் சுவர்" டிவி பார்ப்பதே தேசிய பொழுதுபோக்கு ,நடக்கட்டும் ...நடக்கட்டும் பேனா தேடும் போதெல்லாம் ஒன்றும் சொல்லாத என் கணவர் டிவி பார்க்க உட்கார்ந்ததும் நமுட்டுச் சிரிப்புடன் வெளியில் கிளம்பினார் .