Sunday, November 30, 2008

குன்று குளிர் கூதிர் காலம் ...?!


குன்று
குளிர்
கூதிர்காலம்...
எங்கேயோ எப்போதோ
படித்தது
படித்ததில்
எனக்கே தெரியாமல்
பிடித்துப் போனதோ என்னவோ?
இன்று
சட்டென ஞாபகத்தில் நெருடியது
தொடரும் பயணங்களில்
இப்படி சில நெருடுவதும்
மனதை வருடுவதும்
நல்லதற்கா ?
கெட்டதற்கா ?
யாரிடம் போய்க் கேட்பதோ?
யாரோ சொன்னார்கள்...
பேருந்தில்
ஜன்னலோர
இருக்கை
ரொம்பவே சௌகர்யம் என்று;
மார்கழிக் குளிரில்
அதிகாலை ஐந்து மணிக்கு
ஜன்னலோரம்
பற்கள் சதிராட
உட்கார்ந்து பாருங்கள்
நொந்து கொள்ளலாம் இவ்வுலகை
இன்னொருமுறை...
குன்றையும் குளிர்விக்கும் கூதிர்காலம் ...
இத்தனைக்கும் நடுவில்
கடைசி இருக்கையில்
தாயின் கதகதப்பில்
மறுபடி கருப்பையில்
நுழைந்து விட்ட கனவுகளுடன்
மூடிய கண்ணிமையின்
கீழ்
காய்ந்தும் காயாத
கண்ணீர் கோடுகளோடு
கிழிந்து போன
புடவைத் தலைப்பில்
சுற்றப் பட்டு
நிம்மதியாய்த் துயிலும்
ஒற்றைக் குழந்தை
என்னுள்
இருட்டு வீட்டின்
குருட்டு அறையில்
முரட்டுக் கம்பளி
போர்த்திக் கொண்டு
உடல் குறுக்கி
நீண்டு உறங்கும் ஆசையை
ஏராளமாய்த் தூண்டி விட்டது ;
அடாடா...
இது
குன்றும் குளிரும் கூதிர் காலமன்றோ !!!
குளிர் பழகிப் போகும்
என்பதெல்லாம்
நம்மை நாமே
ஏமாற்றிக் கொள்ளும்
கணநேர சமாதானமே !!!
வெயிலின்
ஸ்பரிசம் பட்ட
அடுத்த நொடியில்
ஏக்கம் மட்டுமே
மிஞ்சி நிற்கலாம் ?!
இத்தனைக்கும் நடுவில்
கள்ளமின்றி தூங்கிப் போன
செல்லக் குழந்தையின்
பட்டுக் கன்னமேட்டில்
துடைக்கப் படாமல்
எஞ்சி நின்ற
ஒற்றைக் கண்ணீர்த் துளியை
எழு மணிச் சூரியன்
வந்து
சட்டென
சுடர் விட்டு
வைரமாய் ஜொலிக்க வைத்ததும்
கொள்ளை அழகில்
மனம் உருகி நின்ற
அந்த நொடியில்
உடலும் கூட
சூடாகி
வெது வெதுப்பானது
இது ஒரு வகை இன்பமோ?!
அந்தரத்தில் இன்பக் கயிற்றில்
உல்லாச நடை பயிலும்
சந்தோஷ நிமிடங்களில்
எதற்கோ பட்டெனக் கயிறு
அறுந்து
விழுந்த இடமோ
நட்ட நாடு ரோடு
பிய்ந்து போன தலையோடு
உடல் பின்னப் பட்டுப் போன
குட்டி நாயின்
துடிக்கும் உடலருகே
மனம் உறைந்து நின்ற
இந்த நொடியில்
மறுபடி
குளிர் தீண்ட
மனம்
விறைத்து உறைந்தது ...
இது ஒரு வகை துன்பமோ?!
நொடிக்கு நொடி
உருகுவதா?
உறைவதா?
என்ற
எல்லையில்லா குழப்பத்தோடு
உறைந்து போன குன்றிலிருந்து
புகைந்து புகைந்து
நெகிழ வைக்கும்
வெயிலைத் தேடி
ஓரமாய்
ஒதுங்கி ஒதுங்கி
மறைந்து போனது
ஏதோ ஒன்று
அது என்னவோ !?
குன்றைக் குளிர வைத்த கூதிரோ !?

Sunday, November 23, 2008

நடை பாதைச்சிறுவர்கள்

அந்தியில்
களைந்து
பரவும்
மேகப்பொதிகள்
வைகறையிலும்
யாமத்திலும்
சிதறித் தெறிக்கும்
மழைச் சொட்டுக்கள்
ரசிப்பதற்கு
இருக்கலாம்
இத்தனை ...
புசிப்பதற்கு
என்ன வழி ?
தினம் தினம்
தேடிக்கொண்டே அலைகிறோம்
நடைபாதைச் சிறுவர்கள்
நாங்கள்!!!

மந்திரவாழ்க்கை...

வெற்றி

மட்டுமே

அடைவேனென்று

தோற்றுப் போகும்

ஒவ்வொரு

முறையும்

சொல்லிக்

கொள்ளும்

நூதனமே

மந்திர வாழ்க்கையின்

தந்திர நகர்தல்களோ...?!

கல்யாணமென்றால் சும்மாவா???

நீ

நீயாவதும்

நான்

நானாவதும்

இனிவரும்

நாட்களில்

முடிகிற காரியமில்லை !

விடிந்து விட்ட

இரவைச் சொல்லியும்

குற்றமில்லை ;

தொலையப் போகும்

பகலை எண்ணியும்

வெட்கமில்லை ;

கல்யாணமென்றால்

சும்மாவா?

கிட்டிய

உரிமையை

ஒட்டியே

வாழ்ந்து முடிப்போம்

வா...

ஒவ்வொரு நாளுமே...!!!

அகலிகையின் இலயிப்பு...

விளக்கின்

சுடரொளியில்

விடியாத

இரவின்

கனவொளியில்

இலயித்திருக்கும் போது

தெரியாது

அகலிகைக்கு

கௌதமரின்

சாபம்

தன்னைக்

கல்லாக்குமென்று

தெரிந்திருந்தால்

விளக்கே

ஏற்றியிருக்க மாட்டாளோ ???

செம்பழுப்பு நிற வயல்கள்

செம்பழுப்பு நிற
வயல்களைக்
கடந்து
காகிதக்
கோட்டையில்
நுழைய
யத்தனிக்கும்
ஒவ்வொருமுறையும்
கனவு
களைந்து
அலறி
விளித்தெழுகிறேன்...

Thursday, November 20, 2008

புள்ளியாகி மறைதல்




எனது


தூரங்களைப் பற்றி


எந்த ஒரு


மதிப்பீடுகளும்


இன்றி


இன்னும்


எத்தனை


தூரம் தான்


இப்படியே


நடப்பதென்று


திரும்பிப் பார்த்த


அணுத்துளி


நொடியில்


புள்ளியாகி


மறைந்தேன்


நானே!!!

Tuesday, November 18, 2008

நிசப்தம்






இலக்கின்றி வெறித்த பார்வைகள்



வெறீச்சிட்ட சம்பவங்களில்



கிறீச்சிட்ட நினைவுபொதியல்களோ?



எதுவோ ஒன்று



மீளும்



ஏதோ



ஒருநாளில் !

Friday, November 14, 2008

சல்லடை இதயங்களே!!!



சலித்து சலித்து


சல்லடையாய்


மாறிப்போன


இதயத்திற்கு மட்டுமே


தெரியக் கூடும்


துளைகளில்


வெளியேற்றப்பட்ட


துயரங்களின் கனம்!!!


ஊடுருவிப் பிரியும்


துகள்களை


நொந்தென்ன


லாபம் ?


அழுகையின் பின்னும்


துயரம்


துயரமே!!!

அம்மாவின் கஷ்டங்களைப் போல...!!!


மரங்களின் ஊடே நடக்கும் போது

கிளைகளில் பார்வை பதியும் போது

இலைகளில் மனம் அலைவுறும் போது

கனிகளைக் கூடையில் எண்ணும் போது

எப்போதும்

முன்னேப்போதுமே

கனிகளின் சுவையைப் போல

எப்போதும்

பின்னேப்போதுமே

மரங்களின் அர்ப்பணிப்பு மட்டும்

ஒருநாளும்

அகத்துக்கு

தட்டுப் படவே இல்லை

அம்மாவின் கஷ்டங்களைப் போல !!!

Thursday, November 13, 2008

மா லாடு(பாசிப்பருப்பு லட்டு) செய்முறை

மா லாடு (பாசிப்பருப்பு லட்டு)
செய்முறை
தேவையான பொருட்கள் :-

பாசிப்பருப்பு-இரண்டு கப்

ஜீனி- மூன்று கப்

நெய்-இருநூறு கிராம்

முந்திரிப்பருப்பு-பத்து

ஏலக்காய் -நான்கு

உலர் திராட்சை-பத்து

செய்முறை :-

முதலில் உடைத்த பாசிப்பருப்பை ((குழம்புக்கு பயன்படுத்தும் பருப்பையே யூஸ் செய்து கொள்ளலாம்) பொன்னிறமாக வறுத்துப் பின் மிசினில் கொடுத்து நைஸாக அரைத்து வைத்துக்கொள்ளவும்,பின் அதே போல ஜீனியையும் மிக்ஸ்சியில் கொடுத்து நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.முந்திரிப்பருப்பு,ஏலக்காய்,உலர் திராட்சையை நெய்யில் வறுத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்,மீதமுள்ள நெய் முழுவதையும் இளம் சூடான பதத்தில் காய்ச்சி வைத்துக் கொள்ளவும், இப்போது நன்றாக அரைத்து தயார் நிலையில் உள்ள பாசிப்பருப்புடன் அரைத்த ஜீனியை சீராகக் கலக்கவும் ,பிறகு வறுத்து தயாராக உள்ள முந்திரிப் பருப்பு,உலர்திராட்சை,ஏலக்காய் போன்றவற்றை பருப்பு பிளஸ் ஜீனிக் கலவையுடன் கலக்கவும்,முடிவாக இளம் சூடான நெய் கலந்த பின் கட்டி தட்டாதவாறு நன்றாக அழுத்திப் பிசையவும் .சீனியுடன் நெய் சேர்ப்பதால் முதலில் இலகும் கலவை சிறிது நேரம் கழித்து இறுகத் தொடங்கும் .சரியான பதம் வந்த பிறகு கைகளால் சிறு சிறு உருண்டைகளாகச் செய்து ஈரம் புகாத பிளாஸ்டிக் டப்பாவில் எடுத்து வைத்துக் கொண்டால் ஒரு வாரம் வரை கேட்டுப் போகாது , சாப்பிட மிக சுவையாக இருப்பதோடு பருப்பு கலந்து செய்வதால் புரதச் சத்தும் கிடைக்கும் .
செய்து தான் பாருங்களேன் .பிறகு உங்களது எண்ணங்களைப் பின்னூட்டமிடுங்கள் எனக்கு .
டிஸ்க்கி : இந்த சமையல் குறிப்பை எழுதிப் பதிவிட்டது பரணி

Monday, November 10, 2008

நிகோலாவும் ரஞ்சனியும்


கதையின் கதை

இது நிஜக் கதை (அதாகப்பட்டது வரலாற்று உண்மை)

ஹம்பி என்று அழைக்கப்படும் விஜயநகரத்தை கி.பி ஆயிரத்து முன்னூற்று ஐம்பத்து ஏழில் தொடங்கி கி.பி ஆயிரத்து நானூற்று எண்பத்து ஐந்து வரை சங்காமா வம்சத்து மன்னர்கள் ஆண்டனர் .
இவர்களில் கி.பி ஆயிரத்து நானூற்று இருபத்து இரண்டு முதல் ஆயிரத்து நானூற்று இருபத்து ஆறு வரை ஆண்ட இரண்டாம் தேவராயன் காலத்தில் விருபாசர் கோயிலுக்கென ஒரு தேர்வீதி அமைக்கப்பட்டது .அவனே அந்தத் தேர்வீதியில் முதன் முதலாக தேர்த்திருவிழாவையும் தொடங்கி வைத்தான் .அப்போது நிக்கோலா கேன்டி என்ற ஐரோப்பியப் பயணி ஹம்பியின் திருவிழாவுக்கு முதன் முதலாக வந்து கலந்து கொண்டார் என்பது வரலாறு .
அதே சமயம் கி.பி ஆயிரத்து நானூற்று எண்பத்து ஐந்த்தில் இல் சங்காமா வம்சத்தின் மூன்றாம் விருபாசனை அவனது கீழிருந்த சாளுவ நரசிம்மன் எனும் சிற்றரசன் பதவி இறக்கம் செய்தான் , பின் ஹம்பி சாளுவர்களின் வசமானது ...ஆக தேர்த்திருவிழாவையும் சங்காமர் ..சாளுவர்களுக்கிடையிலான பகைமையையும் அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கற்ப்பனைக் கதையே இது ...
ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவெனில் கி.பி பதினைந்தாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட அந்தத் தேர்த் திருவிழா இன்றும் கூட ஹம்பியில் மார்ச் ...ஏப்ரல் மாதங்களில் நடைபெறுகிறது என்பது தான் .

இது தான் கற்பனைக் கதை

இடம் - ஹம்பி அல்லது விஜயநகரம்

வருடம் -கி.பி. ஆயிரத்து நானூற்று இருபத்து மூன்றுமாதம் -

நேரம் -அந்திமாலைப் பொழுது

நிகொலாவுக்கு நகரெங்கும் ஒருவித நறுமணம் நிறைந்த கோலாகலம் நிரம்பி வழிவதைப் போல பிரமை ஏற்ப்பட்டது ,கூட நடந்து வந்து கொண்டிருந்த நண்பன் ஹரிஹரனிடம் மெல்லத் திரும்பினான் .
நண்பா இதென்ன வாசனை ? என் மனம் இங்கு வந்த நாள் முதல் இதில் மிகவும் லயித்து போகிறது, நீ மட்டும் உடனில்லா விட்டால் நான் இதன் ஏகாந்தத்தில் மயங்கிப் பொய் இங்கேயே இரவு முழுவதும் நின்றாலும் ஆச்சர்யப்படுவதர்க்கில்லை ! இத்தனை சுகந்தமாய் இருக்கிறதே இதென்ன ஹரிஹரா ?
நிகோலாவின் ஆச்சர்யத்தைக் கண்டு மெல்ல நகைத்தஹரிஹரன் ,வேடிக்கையாக நண்பனின் முதுகில் ஓங்கிக்குத்தினான் ;
நிகோலா நீ ஐரோப்பாவிலிருந்து யாத்ரிகனாக இங்கே வந்தாலும் வந்தாய் ; எங்கள் ஹம்பியில் வான் மழை பெய்கிறதோ இல்லையோ உன்னிடமிருந்து ஒரே கேள்வி மழை தான் போ என்றான் .
ஹரிஹரன் கி.பி ஆயிரத்து நானூற்று இருபத்து இரண்டிலிருந்து இருபது ஆறு வரை ஹம்பியை ஆண்டு வந்த சங்காமா வம்சத்து மன்னன் இரண்டாம் தேவராயானின் சேனாதிபதி அப்பண்ணாவின் கடை இளவல் ,
நாளந்தா பல்கலைக்கழகத்தில் அரசியல் பாடம் பயிலபோன நேரத்தில் நிகோலா எனும் வெள்ளை நண்பன் கிடைத்தான் .நிகோலா வேற்று தேசத்தவன் ஆனாலும் பாரதத்தின் தென்பகுதியில் சில காலம் தங்கி அங்குள்ள மக்களுடன் அளவளாவி அவர்களது வாழ்வுமுறைகளை தெரிந்து கொள்வதில் மிக்க ஆவலுடநிருந்தான் .
அந்த ஆவலே அவனை ஹரிஹரனின் நண்பனாக்கி இன்று ஹம்பிக்கும் அழைத்து வந்து அதன் அழகான தேர்வீதியில் லயித்துப் போய் நடக்க வைத்திருக்கிறது .நகரில் தென்படும் சிறு சிறு விஷயங்களைக் கூட கண்டு அதிசயப்பட்டு கேள்வி மேல் கேள்வியை துளைத்தெடுக்கும் நிகோலாவை புன்னகையுடன் பார்த்து விட்டு நடையைத் தொடர்ந்தான் ஹரிஹரன் ,
என்ன நண்பா , என் கேள்விக்கு நீ இன்னும் பதில் அளிக்கவேயில்லையே ; சொல் ஹரிஹரா ...இதென்ன மணம் ...மனதைக் கிறக்கும் நறுமணம் ? எங்கிருந்து தான் வருகிறது ? அதிலும் ஒவ்வொரு அந்தி மாலையிலும் என்னை ஏதோ செய்து அடிமையாகும் இந்த சுகந்தம் எதற்காகவேன்றேனும் சொல்லி விடேன் ...நிகோலா விழி மூடி நாசி நிரம்ப காற்றை உள்ளிழுத்து அனுபவித்துச் சொன்னான் .
சற்றே விஷமம் கலந்த குறும்போடு நிகோலாவை ஏறிட்டு நோக்கிய ஹரிஹரன் ,அதே வாலிப துடுக்குடன் சரி நான் ஒன்று கேட்கிறேன் , பட்டென்று பதில் சொல் பார்போம் ,
இந்த நறுமணத்தை நுகர்ந்தவுடன் உனக்கு என்னென்ன ஞாபகங்கள் வந்தனவோ உண்மை சொல் நிகோலா என்றான் .
இன்னும்...இன்னும் ...இன்னும் நன்றாக அந்தப் புகை போன்ற வாசம் நிறைந்த காற்றை மூக்கால் முடிந்தவரை நுரையீரல் முழுக்க நிரப்பி சுகானுபவமாய் கண்களை மூடியவாறு மெய் மறந்தவன் போல நிகோலா மென்குரலில் ரகசியம் போல ;
சொல்லட்டுமா ஹரிஹரா என்றான் .வேறு என்ன ஞாபகம் ஹரிஹரா அங்கே கண்ணுக்கு எட்டாத தொலைவில் லண்டனில் எனக்காக ஒவ்வொரு விடியலிலும் எங்களது மூன்று குழந்தைகளுடனும் ...இன்னும் சற்றேனும் குறையாத காதலுடனும் காத்திருக்கும் எனது இனிய மனைவி மார்கரெட்டின் நினைவு தான் சட்டென்று மனதை இருக்குகிறது
... பின் இதமாய் தளர்ந்து பறக்கிறது ...! இது சுகமா ? சோகமா ? பிடிபடவில்லை
ஆனாலும் எதோ ஒரு இனம் புரியா சந்தோசம் உள்ளுக்குள் ததும்பி வழிந்து என்னை மூழ்கடிப்பதென்னவோ முற்றிலும் நிஜம் .எங்கேயோ பார்வை நிலைக்க நிகோலா லண்டனுக்கே போய் விட்டான் தன் நினைவுகளின் பின்னே ...
அதே தான் நிகோலா ;கடல் கடந்தும் இந்த நறுமணம் உன் மனைவியை உனக்கு ஞாபகப்படுத்துகிறதே , அப்படித் தான்
எம் நாட்டு வாலிபர்களுக்கு தம் மனைவிகளின் காதல் நிறைந்த காத்திருப்புகளை இந்த மனோகரமான சுகந்தம் மீண்டும் ...மீண்டும் மீள முடியாமல் நினைவுபடுத்தி "மடையர்களே போதும் உங்கள் பொருள் தேடல் ; வாருங்கள் உங்கள் இல்லாளைத் தேடி " இந்நேரம் உங்கள் மனைவிமார்கள் உங்கள் மனைகளிலெல்லாம் அரிசியும் நெல்லும் பரத்தி அகல் விளக்குகளை ஏற்றி வைத்து இல்லுறை தெய்வங்களை வணங்கி விட்டு உங்கள் வருகையை எதிர்கொண்டு உள்ளுக்கும் வாசலுக்கும் நிலையின்றி கண் பதித்துக் காத்திருப்பார்
" அன்னம் ...நாரை ...புறக்களால் தான் பறந்து வந்து தூது சொல்ல முடியுமா என்ன?நான் கூட பறந்து வருவேன் தூது செல்ல " என்று இந்த பொல்லாத நறுமணம் அவர்களை பரிகசித்து தழுவி தாண்டி செல்லும் ,
மொத்தத்தில் இங்கு மாலைப் பொழுதுகளில் இனிமை கூட்ட "நறுமண விடு தூது " என்று கூட நீ எண்ணிக் கொள்ளலாம் நிகோலா ... இப்படிச் சொல்லி விட்டு ஹரிஹரன் தனக்குள் நகைத்துக் கொண்டான் .
நிகோலா தான் இப்போது லண்டனுக்குப் போய்விட்டானே ;
ஓ மை டியர் மார்கரெட் ...! இன்னும் ... இன்னும் ...எத்தனை ... எத்தனை நாட்களோ ; இல்லையில்லை மாதங்களோ என் அன்பே ! மனைவியைப் பற்றிய தாபத்தால் நீண்ட நெடிய ஏக்கப் பெருமூச்சு விட்ட நண்பனை ஆதரவாய் தோளோடு அணைத்து;
ஆயிற்று நிகோலா ; இதோ நீ ஆவலோடு எதிர்பார்த்த எங்கள் ஹம்பியின் விருபாசா ஆலயத் தேர்த்திருவிழா இன்னும் இரு தினங்களில் துவங்குகிறது ,பிறகென்ன அது முடிந்ததும் நீ உன் பயணத்தை முடித்துக் கொண்டு ஐரோப்பா சென்று விடப் போகிறாய் , அதுவரை இதோ "இந்த நறுமணம் உன்னோடு வாழட்டுமே நண்பா " என்றான் .
நண்பனின் ஆறுதல் வார்த்தைகள் நிகோலாவை மீண்டும் ஹம்பிக்கு அழைத்து வரவே சிலிர்ப்புடன் தலையை உலுக்கி கொண்டு கண்கள் விரிய சொன்னான் .
ஹரிஹரா நான் எனது தேசம் செல்லும் போது மறவாமல் இந்த நறுமணத்தையும் என்னுடன் அழைத்துச் செல்வேன் .அதை எனக்காக நீ பரிசாகத் தருவாயா என் அருமை நண்பனே ! என்றான் .
அவனது அளவற்ற ஆர்வம் கண்டு கேலி இழையோட உரக்கச் சிரித்த ஹரிஹரன்.நிச்சயமாக நிகோலா ...ஆனால் முழுதாக நறுமணத்தைப் பரிசளிக்க யாராலும் முடியாது அப்பனே ! வேண்டுமானால் அந்த வாசனையை எழுப்பும் வேர்கள் , பட்டைகள் , (அகில் ,சந்தனக் கட்டைகள் ,கற்பூர மரவில்லைகள் , தைல மரப்பட்டைகள் ) இவற்றை எல்லாம் நான் உனக்கு எனது அன்புப் பரிசாகத் தருகிறேன் , உன் ஊரை அடைந்ததும் அதை நெருப்பிலிட்டு எரித்தால் நீ மாய்ந்து மாய்ந்து ரசிக்கும் நறுமணம் உன்னோடு உன் வீட்டையும் நிறைத்திடலாம் ;
ஓ நன்றி ஹரிஹரா ...அப்படியே செய் என நிகோலா முடிக்கவும் ஹரிஹரனின் மாளிகை வரவும் சரியாக இருந்தது .
இவர்கள் மாளிகையை அடைந்த நேரம் சேனாதிபதி அப்பண்ணா மனையிலிருந்தார்,
வா நிகோலா ;எப்படியிருக்கிறது எங்கள் ஹம்பி ? அயல் தேசத்திலிருந்து இங்கே வந்திருக்கும் நீ ஹம்பியின் விருந்தினன் ;உன்னை உபசரிப்பதும் உன் தேசத்தைக் கௌரவிப்பதும் வேறு வேறல்ல ...
உனக்கான சௌகர்யங்களில் குறைவேதுமில்லையே இளைஞனே ... எதுவானாலும் சொல் நிகோலா என்றபடி தம் கனமான பார்வையை பார்வையை அவ்விரு இளைஞர்களிடம் படர விட்டார் .
மிக்க நன்றி மதிப்பிற்குரிய சேனாதிபதி அவர்களே;ஹரிஹரன் இருக்கும் போது எனக்கென்ன குறை இருந்து விடும் ? அதோடு நீங்கள் மேன்மை வாய்ந்த பதவியில் இருப்பவர் உங்களது இந்த அன்பான விசரிப்பே போதும் , எனக்கு இங்கே ஒரு சௌகர்யக் குறைவும் இல்லை ,என் மனம் மகிழும் வண்ணமே எல்லாம் நடக்கிறது .
நிகோலாவின் பதிலால் திருப்தி அடைந்த அப்பண்ணா ;
நல்லது நிகோலா , சரி உணவருந்திவிட்டு விரைவாகவே உறங்கச் செல்லுங்கள் ,அடுத்து வரும் பத்து தினங்களும் நமது மன்னர் இரண்டாம் தேவராயர் கோலாகலமாய் நடத்தும் விருபாசா ஆலயத் திருவிழவால் குதூகலமும் கொண்டாட்டமுமாய் ஹம்பியே திணறிப் போய் அமளிப் படும் , இளைஞர்களான நீங்களும் அதில் ஆழ்ந்து விடுவீர்கள் ; அதனால் இப்போதே ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் ,சரி தானே என்றார் .
நல்ல சுவையான இரவு உணவு முடிந்ததும் திறந்திருந்த சாளரங்களின் வழியே உட்புகுந்த மென்காற்றால் கண்களை சுழற்றிக் கொண்டு தூக்கம் வர சயனஅறைகள் பேச்சு மூச்சின்றி நிசப்தத்தில் ஆழ்ந்தன.
மறுநாள் எப்போதும் போல் கழிந்தது ,
அதற்கடுத்த நாள் தேர்த் திருவிழா கனஜோராய் ஆரம்பமானது .
சாதாரண நாட்களில் நிகோலாவின் கருத்தில் அவ்வளவாகப் பதியாத தேர்வீதியின் பிரமாண்டம் அன்று அவனை வெகுவாக வியப்பில் ஆழ்த்தியது .ஒற்றையாய் அகலமான நீண்ட பெரிய நேர்கோடாக அமைந்த தேர்வீதி கிட்டத் தட்ட ஒரு கிலோமீட்ட்ர் நீளமும் ஐம்பதடி அகலமும் கொண்டதாகப் பறந்து விரிந்திருந்தது . விருபாசா ஆலயத்தின் கிழக்குப் பகுதியில் ஆரம்பிக்கும் வீதி மதங்கா மலையின் வடமேற்கு அடிவாரம் வரை நீண்டு கொண்டே செல்வதைக் கண்டு நிகோலா பெரிதும் ஆச்சர்யப்பட்டுப் போனான் .உலகில் தான் கண்ட எல்லா சாம்ராஜ்யங்களிலும் கூட இப்படி ஒரு வெகு பிரமாண்டமான தேர்வீதியைக் கண்டதில்லையோ ! என்று அதிசயித்துகொண்டு மீண்டும் அங்கேயே பார்வையை சுழல விட்டான் .தேர்வீதியின் இருபுறங்களிலும் அழகழகான மாடங்களுடன் கூடிய இரட்டைத் தள வீடுகளும் ; திருவிழாவுக்கென முளைத்த சிறப்பு அங்காடிகளும் , விழாவைக் காண வருவோருக்கென நிறைய சத்திரங்களுமாய் நிரம்பி அந்தத் தேர்வீதியே ஜெகஜோதியாய் ஜொலித்து ஹம்பிக்கு கூடுதல் அழகூட்டிக் கொண்டிருந்தது .இன்று நிகோலா தனியாகத்தான் ஊர் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தான் . கூடவே புறப்பட்ட ஹரிஹரனுக்கு " வெகு அவசரம்... உடனே வா " என அப்பன்னா இடமிருந்து அவரது பணியாளன் ஒருவன் அழைப்பு கொண்டுவர அவன் அங்கே போக வேண்டியதாகி விட்டது. என்ன தான் படைத்தளபதியின் தம்பியானாலும் ஹரிஹரன் படிப்படியான முன்னேற்றத்தையே விரும்பி ஒரு சாதாரண ஒற்றர் படை வீரனாகவே "சங்காமா " அரசில் பணியில் இருந்தான் . வெகு விரைவாகவே அரசர் இரண்டாம் தேவராயரின் அன்பையும், நன்மதிப்பையும் கூட சம்பாதித்து விட்டான் .'நண்பன் நல்ல திறமைசாலி தான் ' என்று எண்ணமிட்டவாறு நடந்து கொண்டிருந்த நிகொலாவை ; அந்தக் குரல் பிடித்து இழுத்து நிறுத்தியது .
ஐயோ ...காப்பாற்றுங்களேன் ...யாராவது வந்து உதவுங்களேன் ...யாரவது வாருங்களேன் ... யாருமே இல்லையா என்னைக் காப்பாற்ற !!! ஒரு இளம்பெண்ணின் அவலக்குரல் அங்கிருந்த ஆடைகளுக்கான அங்காடிப் பகுதியில் இருந்து வலிந்து வெளியேறி வீதியில் போவோர் வருவோரை கட்டி இழுத்து நிறுத்தியது .

மீதிக் கதை அடுத்த பதிவில் தொடரும் ...

வானவில்




//இந்த படத்தை உற்று பாருங்கள். என்ன தோன்றுகிறதோ, அதை கவிதையாக தாருங்களேன். முயற்சி செய்யுங்கள்// பிளாக்கர் கடையம் ஆனந்தின் அழைப்பை ஏற்று

(எனக்கு இதான் தோணுச்சு )


வர்ணங்களும்

வர்ணமயக்கங்களும்

சொல்லாமல் சொல்லும்

வாழ்வின்

படிநிலை மாற்றங்கள்

யாருக்கும்

உரிமையற்ற

அடிப்படை உரிமைகள்

பருகலாம்

கண்கள் கொள்ளும் வரை

கொண்டாடாதே சொந்தம் மட்டும் ...!


நிறங்களின் ஊடலையும் மனம் ...!!!



எந்த நிறம்


நல்ல நிறம்?


மௌனத்தின்


சலனத்தோடு


முனை மழுங்கிய


புலன்களின் ஊடே


வழுக்கிக் கொண்டு


சறுக்கும்போது


புள்ளியில்


குவிந்த


பெருவெளிச்சத்தின்மத்தியில்


துழாவித்....துழாவி


ஓய்ந்த பின்


எல்லையற்ற


நீள்வெளியில்


கருப்பு அழைத்தது


தன்னுள் அமிழ ;


வெளுப்பு நழுவியது


ஒட்டாமல் வெட்டிக்கொண்டு


கூம்புகளும் உருளைகளும்


குழம்பித் திகைத்த


ஏதோ ஒரு நொடியில்


குத்தீட்டிகளாய்


பரவிச்சிதறின


பளபளப்பாய்


பல நிறங்கள்


நிறங்களின் ஊடலையும் மனமே ...


எந்த நிறம்


நல்ல நிறம் ?

Friday, November 7, 2008

கதை சொல்லி (இது ஒரு புத்தம் புதிய கதை)



கடல் நடுவே

ஒரு கானகமாம்

கானகத்தில்

ஒரு

நெடுவனமாம்

நெடுவனத்தில்

ஒரு

பெருங்காடாம்

பெருங்காட்டில்

ஒரு

நிழற்படமாம்

நிழற்ப்படத்தில்

ஒரு

மாக்கடலாம்

மாக்கடலாம் அக்கடலில்

என்ன?

இப்போது என்ன என்கிறேன் ?

இதொன்றும் தவறில்லை

இப்படியும் கதை சொல்லலாம்

ராஜ ராணிக்கதைகள்

ஓய்ந்து போய்விட்ட பின்

இப்படித்தான்

கதை சொல்கிறோம் ;

என்ன செய்ய ?

சொன்னதையே

சொல்லிக்

கொண்டு

கேட்டதையே

கேட்டுக் கொண்டு

பார்த்ததையே

பார்த்துக் கொண்டு

சலிக்கும் வரை ;

சலித்த பின்னும் ...

இப்படியும் கதை சொல்லலாம் ?!


Tuesday, November 4, 2008

"கடந்து போனவள் "

எதிர் வெயிலுக்கு முகம் சுருக்கி தன் முன்னே நடந்து போய்க் கொண்டு இருந்த அந்தப் பெண்ணை முருகேசனுக்கு கொஞ்ச நாளாய் நன்றாகவே தெரியும் .

தினமும் இந்த வழியாகத்தானே போகிறாள் ....வருகிறாள் ...; ஒரு முறையேனும் அவள் இவனைத் திரும்பி பார்த்ததில்லை ... இவனும் அப்பெண்ணை பார்க்க வேண்டும் என்று பார்த்ததில்லை ... பழக்கதோஷம் என்பார்களே அப்படித்தான் இதுவும் ,

முருகேசன் அயன் கடை வைத்திருந்த தெரு அப்பெண் குடியிருக்கும் தெருவாகி விட்டதால் அடிக்கடி பார்வையில் பட நேர்ந்தது ...அதுவே பின்னாளில் அவளைப் பற்றி அவன் யோசிக்கவும் வழிவகுத்தது . ஒருநாள் அப்பெண்ணைப் தெருவில் பார்க்கா விட்டாலும் " இன்னும் காணோமே ... என்று மனம் கேள்வி கேட்கும் நிலை வந்து விட்டது இப்போதெல்லாம் ...

பசி வந்ததும் கூடவே தங்கத்தின் ஞாபகம் வந்தது , மதியம் என்ன செய்து வைத்திருப்பாளோ ? எட்டு மணிக்கெல்லாம் " மீன் ...மீன் ...மீனோய்... வஞ்சிரம் மீனோய் ! என்று கூவி கொண்டு போன மீன்காரனின் குரல் செவியில் இன்னும் கூட தேனாய் தித்தித்தது , இன்றைக்கு மீன் செய்ய சொல்லி இருக்கலாம் ...!!!

தங்கம் எது செய்தாலும் வாய்க்கு ருசியாகத்தான் செய்வாள் .கோழிகறி ஆகட்டும் ...ஆட்டுக்கறி ஆகட்டும் ...உண்டு முடித்தபின் ஆளை ஒரு அசத்து அசத்தி விடும் . தங்கத்துக்கும் , முருகேசனுக்கும் கல்யாணமாகி ஐந்து வருடம் ஓடி விட்டாலும் சின்னஞ்சிறுசுகள் போலத் தான் இப்போதும் கேலியும் கிண்டலும் தூள் பறக்கும் அவர்களது சம்பாசனையில் .

பிள்ளையில்லாத வெறுமை கூட இதற்கு காரணமாயிருக்குமோ என்னவோ?பாதையில் கடந்து போகும் அந்தப் பெண்ணின் பெயர் முருகேசனுக்குத் தெரியாது . கூட ஒரு குழந்தை நடந்து போகும் அது அவளுடைய குழந்தை தான் . வாய் ஓயாமல் பேசிக் கொண்டே போகும் .

"மம்மி நீ வர வேண்டாம் னு சொல்றேன்ல" நான் தான் இப்ப பிக் கேர்ள்ஆயிட்டேன் ல"அவள் அதிகம் பேச மாட்டாள் , "ரோட்டைப் பார்த்து நட குட்டிம்மா " இது தான் அவள் பேசி அவன் கேட்ட வார்த்தைகள் ,

மாமியார் தூரத்தில் துணி மூட்டையுடன் வருவது இங்கிருந்து நிழல் அசைவாய் கண்ணில் பட்டது , பாவம் இந்த வயதிலும் கடின உழைப்பாளி , வீடு வீடாய் போய் அயனுக்குத் துணி வாங்கி வருவாள் அதை பெட்டி போட்டுத் தந்ததும் மறுபடி வீடு வீடாய் போய் கொடுத்து பணம் வாங்கி கொண்டு வருவாள் .

முருகேசனுக்கு நல்ல சப்போர்ட் , என்று பக்கத்தில் கறிக்கடை வைத்திருக்கும் முனியசாமி சிலாகித்துச் சொல்லிக் கொள்வார். மாமியார் வெயிலை உடல் முழுதும் உறிஞ்சி விட்ட ஆயசத்தில் கருத்துப் போன முகத்தைத் அழுந்தத் துடைத்து விட்டு , பானையில் இருந்து சொமபு சொம்பாய் நீர் மொண்டு குடித்து விட்டு கொஞ்சம் முகத்திலும் சுளீர் ...சுளீரென்று தண்ணீரால் அடித்துக் கொண்டு துடைக்காமல் விட்டு விட்டாள். காற்று படப் பட இதமாய் இருக்கும் போல ... "

சரி முருகேசு நீ வீட்டுக்குப் போ ... மணி ஆவுது பாரு" நல்லவள் தான் ஆனால் வாய் கொஞ்சம் ஜாஸ்தி ... பேச்சு அதிகாரமாய் தான் இருக்கும் , இதனால் அயனுக்கு தருகிறவர்கள் ஒன்றிரண்டு பேருடன் அவ்வப்போது சின்ன சின்னத் தகராறும் செய்து கொள்வாள் ,பிறகு மறுபடி அவளே அதை சரி செய்து விடுவாள் ,

பாதையில் கடந்து போகும் அந்தப் பெண்ணுடன் கூட ஒருமுறை சின்ன சண்டை போட்டிருக்கிறாள் , அன்றைக்கு முருகேசன் கடைக்கு வராத நாள் .மச்சினன் சித்த நாதனை கடையில் நிற்க வைத்து விட்டு புதுப்பேட்டையில் இருக்கும் ஒன்று விட்ட தம்பி மனைவியின் நாத்தனார் இறந்த துஷ்டி கேட்க போயிருந்தான் .

அந்தப் பெண் கடைக்கு துணி கொண்டு வந்து அவன் பார்த்ததில்லை ?மாமியார் தான் போய் வாங்கி வருவாள் , அவசரமென்றால் அவளது கணவன் வந்து பெட்டி போட்ட துணிகளை வாங்கி போவான் . அவள் வீட்டு துணிகள் இவனுக்கு நன்றாகவே அத்துப்படி கணவனது உடைகள் நிச்சயம் விலை கூடுதலாய்த் தான் இருக்கும் ,அருமையான மேல்சட்டைகள் , பெரும்பாலும் அவளது துணிகள் வராது .

எப்போதாவது ஒரு சுடிதார் வரும் ,இல்லாவிட்டால் பட்டுப்புடவை வரும் . குழந்தையின் பட்டுப்பாவாடை ,சட்டை ,இப்படி கொஞ்சம் வரும் . அவள் சுடிதார் அயனுக்குப் போடததாலோ என்னவோ ! தினம் அவள் கடை தாண்டிப் போகையில் இவன் அவளது உடை பார்க்க ஆரம்பித்தான் .

ஓ... இன்னைக்கு பச்சை கலர் சுடிதார் ! இன்னைக்கு வெள்ளிக்கிழமை அதான் சிவப்புக் கலர் சுடிதாரோ ..! அட இந்த ஊதா கலர் சுடிதார் அந்தப் புள்ள நிறத்துக்கு அவ்ளோ எடுப்பா இல்லையோ ...?! இதென்ன இவ்ளோ சுருக்கஞ் சுருக்கமா இருக்கு ? நல்லா தண்ணிய உதறி சுர்ருன்னு இழுத்து தேய்ச்சா அப்படியே கம்பியாட்டம் நிக்கும் இந்த வெள்ளைக் காட்டன் சுடிதார் ...

சேலை கட்டவே மாட்டா போல ?ஒருமுறை எதேச்சையாய் தங்கத்திடம் கூற அவள் பார்த்த கேலிப் பார்வையில் பிறகு இவன் கருத்து கந்தசாமி போல அவளிடம் எல்லாம் சொல்வதை நிறுத்தி விட்டான் . இன்றைக்கு காலையில் எழுந்ததிலிருந்தே மனம் ஏதோ ஒரு அவஸ்தையில் பர பரவென்று தான் இருந்தது , எப்போதாவது இப்படி நிகழ்வதுண்டு தான் ,

பதினெட்டு வயதில் முதல் முறை சொந்த அத்தை மகள் கனகம் வயசுக்கு வந்ததும் கூட்டாளிகளின் கேலி கிண்டலுக்கு மத்தியில் அவளுக்கு குச்சு கட்டப் போகையில் இப்படித்தான் ஆனதாய் ஞாபகம்....!!!

பிறகொரு முறை ; மதுரை அழகர் கோயிலின் தீர்த்த தொட்டியில் குளித்து விட்டு கீழே வருகையில் குரங்குக்கு பயந்து மிரண்டு ஒதுங்குவதாய் நினைத்து தடுமாறி விழப்போன பத்து வயது பெண் குழந்தை ஒன்று இவன் மீது மோதி நிற்க பதறிப் போய் தாங்கினான் . நடுங்கி ஓய்ந்த குழந்தை சரியானபின் சிறு புன்னகையுடன் ; "தேங்க்ஸ் அங்கிள் " என்று புறங்கையில் முத்தமிட்டு விட்டு ஓடிவிட . அப்போதும் இப்படித்தான் பர பரத்து சிலிர்த்தது மனசு .

பிறகு தங்கத்துக்கும் அவனுக்கும் கல்யாணமான அன்று இரவில் அவளுக்காக தனி அறையில் காத்திருக்கும் போது கூட மனம் இப்படி தான் .... வெட்ட வெளியில் சீறும் காற்றில் ஒற்றையாய் கொடியில் சட சடக்கும் சல்லாத் துணி போல் பட பட வென அடித்துக் கொண்டு பர பரத்து அலைந்தது .

இது போல சொல்லிக்கொள்ள உதாரணங்கள் இன்னும் கூட சில உண்டு அவனுக்கு .... இன்று என்ன வரப் போகிறதோ ?!போனவளை இன்னும் காணோமே ?! யோசனையுடன் அவள் போன திக்கை யதேச்சையாய் பார்த்தால் அவள் கணவன் தான் என்றுமில்லா அவசரகதியில் வண்டியை அலற விட்டுக் கொண்டு வந்து கொண்டிருந்தான் .

கொஞ்சம் மெதுவாய் போனால் தான் என்ன ? மனதோடு சொல்லிக் கொண்டான் . அவளைக் காணோம் , இந்த வழியாகத்தானே வருவாள் என்று மறு படி சொல்லிக்கொண்டு , மதியச் சாப்பாட்டுக்காக வீட்டுக்குப் புறப்பட்டுப் போனான் . சாப்பிட்டு விட்டு ஒரு அரை மணி தூங்குவான் ,இன்றும் அப்படிப் படுத்தான் .

காலையிலிருந்து உள்ளே எழுந்து ஆடிக் கொண்டு இருந்த மனப் பாம்பின் சீற்றம் தங்கம் இவன் கேட்காமலே மனதறிந்து செய்து வைத்த வஞ்சிரம் மீனில் சற்றே வாலைச் சுருட்டிக் கொண்டு ஓய ஒரு மணி நேரத்துக்கும் மேலாகவே தூங்கி விட்டான் போல ....! தங்கம் டீ போட்டுக் கொண்டு எழுப்பித் தரும் போது மணி நான்கை தொட்டிருந்தது , மாமியார் புலம்பிக் கொண்டிருப்பாளே என்று வேக வேகமாய் கிளம்பி போனான் .

மெல்லத் தான் போயேன் ....ஏன் ஓடற ...? தங்கம் பேசியவாறு பின்னோடு அவனுடனே கடைக்கு வந்தாள் ...கொஞ்ச நேரம் இருந்துவ்விட்டு விளக்கு வைக்க வீட்டுக்குப் போவாள் அவள் .கடைக்குள் நுழைந்தவனுக்கு ஆச்சர்யமான இன்ப அதிர்ச்சி மேலெழும்பி குதியாளம் போடாத குறை தான் , அந்தப் பெண் இரண்டு பெரிய கட்டை பைகள் நிறைய அயனுக்குத் துணிகள் கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போய்க் கொண்டிருந்தாள்.

அன்றைக்கு முருகேசன் வழக்கத்தை விட ரொம்ப சந்தோசமாய் மனைவியிடமும், மாமியாரிடமும் பேசிச் சிரித்தவாறு துணிகளைப் பெட்டி போட்டு முடித்தான் . இனிமேல் அவள் வீட்டுத் துணிகள் மறுபடியும் இங்கே தான் வரும் . அவள் வந்ததில் இவனுக்கு என்ன சந்தோசமோ ???!!! அவனுக்கே புரியவில்லை தான் ...

ஆனாலும் குதூகலமாய் ராத்திரிக்கு தங்கத்துக்கு அல்வா வாங்கிக் கொண்டு போனான் வீட்டுக்கு ... என்னய்யா இது ? சனிக்கிழம தான வாங்கிட்டு வருவா ... இன்னிக்கி என்னவாம் ..என்று வெட்கச் சிரிப்போடு வாங்கி வைத்த மனைவியின் கன்னத்தைச் செல்லமாக கிள்ளி விட்டு குளிக்கப் போனான் . இரவு நன்றாகத் தூக்கம் வந்தது .

மறுநாள் வழக்கத்தை விட வேகமாய் கடை திறந்து வேலையை ஆரம்பித்தான் .அவன் கடைக்கு அடுத்து ஒரு மளிகைக் கடை, ஒரு ஜெராக்ஸ் கடை .ஒரு கல்யாணமண்டபம் ,அதற்கும் அப்பால் வக்கீல் சீதாராமன் வீட்டை அடுத்து அவள் குடியிருக்கும் வீடு தான் ,

அது ஒரு அபார்ட்மென்ட் , மொத்தம் இருபது வீடுகள் ,அவள் இருப்பது முதல் பிளாட்டில் தான் , முருகேசன் கடை திறக்கும் போது நேரம் ஏழரை மணி இருக்கும் . வழக்கமாக எட்டு மணிக்கு தான் போவான், இன்று என்னவோ ஒரு இனம் புரியா உல்லாஷம்.

யதேச்சையாகத்தான் பார்த்தான் .... அவள் பிளாட்டின் முன்புறம் ஒரு லாரி நின்று கொண்டிருந்தது . நெடு நேரமாய் நின்று கொண்டிருக்கும் போல இவன் இப்போது தான் பார்கிறான் .யாரோ வீடு மாற்றிக் கொண்டு போகப் போகிறார்கள் போல ...

அந்த பிளாட்டில் இப்படித்தான் அடிக்கடி ஒரு வீட்டில் மட்டும் இப்படி நிகழும் . ராசி இல்லாத வீடாம் அது ... என்ன ராசியோ ?! என்ன நம்பிக்கையோ ? போங்கடா நீங்களும் உங்க நம்பிக்கையும் ...! கிண்டலாய் உள்ளே நகைத்துக் கொண்ட முருகேசன் தன் வேலையைப் பார்க்கலானான் .

நேரம் போய்க் கொண்டே இருந்தது . அந்தப் பெண்ணைக் காணோம் ...! குழந்தையையும் பள்ளிக்கு கூட்டிக் கொண்டு போனதாகத் தெரியவில்லை பெட்டி போடப் பட்ட துணிகளையும் வாங்கிக் கொண்டு போனதாகத் தெரியவில்லை . சரி வரும் போது வரட்டும் .... இவன் இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போதே ;

அந்த லாரி தாண்டி முகமெல்லாம் சந்தோசம் பூத்துக் குலுங்க அவள் ....அவள் தான்.... அந்தப் பெண் வந்து கொண்டிருந்தாள் .... இவனது கடையை நோக்கி ...துணி வாங்க வருகிறாள் போல ... வரட்டும் ... வரட்டும் ... அவளது சந்தோசம் ' முருகேசனையும் தொற்றிக் கொள்ள ...

அப்போது சூரியன் எப் எம் மில்

"வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ" பாடல் முடிந்து

"வா வெண்ணிலா உன்னைத் தானே வானம் தேடுதே"

பாடல் மாயவரம் ராதா ,மதுரை சுப்பு , தேனாம் பேட்டை மல்லிகா ,ஒன்டிபுதூர் அம்பிகா ஆகியோருக்காக ஒலி பரப்பிக் கொண்டிருந்தார்கள்;

மெல்லப் தனக்குள் பாடிக்கொண்டே அவள் கிட்டே வரக் காத்திருந்தான் ... வந்தாள் ...

வந்தவள் ... அவன் மாமியாரிடம் .

எவ்ளோ ஆச்சு ஆயா ? என்று கேட்டு பணம் தந்து துணி வாங்கி நகரப் போனாள். வக்கீல் சீதாராமன் மனைவி காம்பௌண்டில் இருந்து எட்டிப் பார்த்து சத்தமாய் கேட்டாள்...

"ஏண்டிம்மா கல்பனா .. எத்தனை மணிக்கு கிளம்பறேல் ...சாமான் சட்டேல்ல்லாம் பாத்து பாக் பண்ணிட்டேலா இல்லியோ ?" அவள் மாமிக்கு என்ன பதில் சொன்னாலோ ???!!!

அவளது வீட்டைப் போலவே இப்போது இவனது மனமும் காலியாக .... ஒரு கணம் முகத்தில் சந்தோசம் வடிந்து சங்கடம் காட்டி நின்றவன் .....சின்னதாய் உள்ளே ஒரு குரல் ஓ... கல்பனாவா ...இதான் உன் பேரா ..? என்று மெல்ல சொல்லிப் பார்த்துக் கொண்டது.

இந்தக் கல்பனா இனி அவன் கடை தாண்டி .. அந்தப் பக்கம் போக மாட்டாள் .இந்தப் பக்கமும் போக மாட்டாள் ... ஏன் இடப்பக்கம் ... வலப்பக்கம் என்று எந்தப் பக்கமும் போகவே மாட்டாள் தான் ... அவள் இனி அந்தத் தெருவில் இருந்தால் தானே எப்பக்கமும் போவதற்கு ?

முருகேசனின் மன பரபரப்பு இந்த முறை இப்படி தான் ஓய வேண்டும் போல ?!இப்படி ஒரு நிமிடம் எல்லோருடைய வாழ்விலும் வந்து போவது உண்டு தானே !!!

பெண் பார்த்தல் ...???


எங்கேயோ புறப்பட்டவளாய்த் தான் ரங்கா என்கிற ரங்கநாயகி இங்கே வந்து இந்த சுடு வெயிலில் நின்று கொண்டிருக்கிறாள் இந்நேரம் ,

ஏன் ...ஏன் ...எதற்கு இவள் இப்படி நிற்கிறாள்?

என்று கடந்து போனவர்கள் எல்லோரும் கேட்டுக் கொண்டே போய்க் கொண்டு இருந்தார்கள் .அவள் மட்டும் இடம் மாறாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தாள் .

ரங்கா ...ஏய் ரங்கா யாரோ அழைப்பது அங்கே அப்போதிருந்த எல்லோருக்குமே கேட்டது .அவளுக்கும் கேட்டிருக்கும் ...அவள் காது கேட்காதவள் அல்லவே !

எனக்கு ரங்காவை கொஞ்ச நாளாய் தெரியும் ,முதல் முறை அவளைப் பார்க்கும் போது எனக்கு ஒன்றும் தோன்றவில்லை .இரண்டாம் முறை...மூன்றாம் முறை ...ஏன் பலமுறை பார்த்திருந்த போதிலும் அவளைப் பற்றி பெரிதாய் ஒன்றுமே நினைக்கத் தோன்றியதே இல்லை .

இன்றைக்கு காலையில் தான் திடீரென்று இவளைப் பற்றி நினைத்துக் கொண்டேன் , அவளிருந்த கிராமத்தில் நான் இருந்தேன் என்பது ஒன்று மட்டும் தான் அதுவரை எங்களுக்கிடையில் இருந்த ஒரே ஒரு பந்தம் .

அந்த கிராமத்தில் எங்களைத் தவிரவும் நிறையப் பேர் இருக்கத்தான் செய்தார்கள் .

எல்லோருக்கும் என்னைத் தெரிந்தே இருந்தது .அந்த ஊரின் ஒரே ஒரு அரசாங்க டாக்டர் என்ற முறையில் என்னை தெரிந்தே வைத்திருந்தார்கள் . நேற்று மாமா வந்து விட்டுப் போயிருந்தார் .எனகேற்ற டாக்டர் பெண் வரன் நேற்று தான் தகைந்ததாம் ...

அலுப்பு தீர்ந்த மகிழ்வோடு அந்தப் பெண்ணின் புகைப்படம் இன்ன பிற தகவல் சொல்லி விட்டு உடனே ஊருக்குப் போயே ஆக வேண்டும் என்றார் இதோ இப்போது அவரை பஸ் ஏற்றி விடத்தான் மத்தியான நிறை வெயிலில் இருவரும் பஸ் ஸ்டாண்டில் நிற்கிறோம் .

ரங்கா தன்னைச் சுற்றிலும் யாருமே இல்லாததைப் போல் பாவித்தவளாய் சின்னக் குரலில் இப்போது பாட ஆரம்பித்திருந்தாள்.அது ஏதோ புரியாத பாஷை தமிழாய் இருக்க வாய்ப்பில்லை ...அர்த்தமே புரியவில்லை ..ஆனால் தமிழ் பாட்டைப் போலவே இருந்தது அதன் ஓசை நயம் ,

மட்டை வெயிலில் மண்டை காய்ந்தது எனக்கு ,மாமா ரங்காவைப் பார்த்து ;மாப்ள 'என்ன இந்தப் புள்ளக்கி பைத்தியமா ' என்றார் என்னிடம் நான் தெரியாது என்பதாய் உதட்டை பிதுக்கி தலையை ஆட்டினேன் .

அந்த ஊருக்கு அடிக்கடி பஸ் உண்டு ,இது சாப்பாட்டு நேரம் ...ஒரு பஸ்சையும் காணோம் ...

வரும் ...ஆனால் வராது கணக்காய் நாங்கள் காத்திருந்தோம் .ரங்காவின் அம்மா வந்து அவளைப் பிடித்து இழுத்தாள்,என்னம்மா ரங்கா இப்பிடிப் போய் நாடு ரோட்ல நின்னுகிட்டு இருக்க ..வாம்மா வீட்டுக்குப் போலாம் ...ரங்கா தன் காலைத் தூக்கிக் காட்டி விட்டு மறுபடி நாடு ரோட்டில் நின்று கொண்டாள்(செருப்பு போட்டிருக்கிராளாம்)

அம்மா தன் சேலைத் தலைப்பை முக்காடு இட்டவாறு ரங்காவுக்கு துணையாய் அங்கே நிற்க சங்கடப்படாமல் மறுபடி அவளிடம் வாம்மா இனி நாளைக்கு வந்து நிப்பியாம் ...இன்னைக்குப் போதும் ..ரொம்ப வெயில் ஏறுது பாரு ..வாடா போலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தாள் .

மாமா அதிசயித்துப் போய் என்னைப் பார்த்தார் ,என்ன மாப்ள இது கூத்து .தெனம் இந்தப் புள்ள இப்பிடித்தான் இங்க நிக்குமா என்றார் என்னிடம் ,

மாமா கேட்டது போல நானும் இந்த ஊருக்கு வந்த புதிதில் சிலரிடம் இப்படிக் கேட்டிருக்கிறேன் தானே.

ஒரு இருபத்து ஐந்து வயதுப் பெண் இந்நேரம் மேற்படிப்பு படிக்கப் போயிருக்க வேண்டும் இல்லாவிட்டால் கல்யாணமாகி புருஷன் வீட்டில் குழந்தையை சீராட்டிக் கொண்டிருக்க வேண்டிய பெண் இப்படி ஒரு ரெண்டும் கெட்டான் கிராமத்தில் நட்ட நடு ரோட்டில் மட்ட மத்தியான சூட்டு வெயிலில் எங்கேயோ வெளியூர் போன புருஷனை வரவேற்க வந்தவள் போல அதீதமான அலங்காரத்தோடு அத்தனை பேர் நிற்கும் பஸ் ஸ்டாண்டில் வந்து தினமும் நிற்பானேன் !!!.

பொண்ணுக்கு கொஞ்சம் புத்தி சுவாதீனம் இல்லையோ ...? ஏனோ இதை யாரிடமும் கேட்டதில்லை நான் ,வந்த நாள் முதல் இந்த நாள் வரை அவளை நான் பலமுறை பார்க்க நேரிட்டும் அதென்னவோ இதொன்றும் மனதில் பதியவே இல்லை .எப்போது சென்னைக்கு டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு ஓடுவோம் என்ற முனைப்பில் அவளைப் பற்றி யோசிக்கவோ கேள்வி கேட்கவோ எனக்கு தோன்றியதே இல்லை .

ஒரு வழியாய் பஸ் வரவே மாமா புறப்பட்டுப் போனார் .

ரங்கா அங்கேயே தான் தொடர்ந்து நின்றுகொண்டே இருந்தாள்.அவள் அப்படித் தான் !!!அவளுக்காய் எப்போது அலுக்கிறதோ அப்போது அவளாய் போய் விடுவாள் . பாதுகாப்பான பைத்தியம் தான் போல என்று பல நாட்களைப் போல இன்றும் நினைத்தவாறு நான் என் வீட்டை நோக்கி நடந்தேன் .

மாமா கொடுத்து விட்டுப் போன அந்தப் பெண்ணின் புகைப்படத்தை காலையில் சரியாகப் பார்க்கவே இல்லையே என்று நானாய் நினைத்துக் கொண்டு மறுபடி அதைக் கையில் எடுத்தவாறு கட்டிலில் சாய்ந்தேன் .நன்றாகத் தான் இருந்தாள்

அழகாய் பார்க்க கண்ணுக்கு லட்சணமாய் மஞ்சள் வளையங்களிட்ட இளம்பச்சை நிற பெங்கால் காட்டன் புடவை உடுத்தி இருந்தாள் .

ரங்கா என்ன நிறப் புடவை இன்று உடுத்திக் கொண்டிருந்தாள் ?

மனம் ரங்காவின் பின் ஓட அதை ஒதுக்கி விட்டு ,

மாமா பெயர் என்ன சொன்னார்..? ம்ம்ம் ...ம்ம் ... சத்யாவோ ...நித்யாவோ ?ரெண்டுமே நல்ல பெயர் தான் ,

ரங்கநாயகி ...ரங்கா கூட நல்ல பேர் தானே ...!!!சரி ..சரி இப்போதென்ன ரங்காவைப் பற்றி ?

நல்ல அடர்த்தியான தலை முடி சத்யாவுக்கு ...இல்லை நித்யாவுக்கு !!!ரங்காவுக்கும் தான் ஆனால் அதில் அவள் பூச்சூடி நான் கண்டதே இல்லை ஒருநாளும் ...;

பெண் பிடித்திருக்கிறது என்று அம்மாவிடம் போனில் இன்றைக்கே சொல்லி விட வேண்டியது தான் ,டாக்டர் என்பதால் பிரச்சினையே இல்லை ,ரெண்டு பேருக்கும் எப்படியோ ஒத்துப் போய் விடும் ,அவளோ இல்லாவிட்டால் நானோ விட்டுக் கொடுத்து வாழ்ந்து கொள்ள வேண்டியது தான் ...(எதை விட்டுக் கொடுப்பது ?

மனம் கேள்வி எழுப்ப அந்நேரமே அதை ஒரே அமுக்காய் அமுக்கிக் கொன்றேன் ..கேள்வியே கேட்காதே ,இது அதற்கான நேரமே அல்ல )எனக்கு கொஞ்சம் செலக்டிவ் அம்னீசியா ...அடிக்கடி சிலவற்றை மறந்து போய்விடுவேன்,

இப்படியும் கூட சொல்லலாம் ...மறந்து போக வேண்டும் என நினைத்து ஒதுக்கியதை நான் மறுபடி நினைப்பதில்லை என்று

அப்படித் தான் ...

அப்படித் தான் ...

ரங்காவையும் நான் மறந்து விட்டிருந்தேன் ,

எனக்கு இதுவரை ஏழெட்டு இடங்களில் பெண் பார்த்திருப்போம் .

யாரையும் நேரில் சென்றெல்லாம் பார்த்ததில்லை .பேச்சு வார்த்தை முடிந்து எல்லாம் சரி என்று இரண்டு தரப்பிலும் முடிவான பின் தான் நான் நேரில் பெண்ணைப் பார்க்க வருவேன் என்று அம்மாவிடம் முடிவாகச் சொல்லி இருந்தேன் .

அம்மாவும் சரி என்றிருந்தாள்.அப்படி நான் போட்டோவில் பார்த்த முதல் பெண் .

"ரங்கா ...என்கிற ரங்கநாயகி "

Sunday, November 2, 2008

இது ஹைகூவா ?இதுவும் ஹைகூ தான்!!!

லீவு

முடியும்போது
தொடங்கியது

பரீட்சை !!!

பாட்டியில்லாத முதல் நாள் ...


தொடரும் வேலைகள்


மூச்சுத் திணற வைக்கும்


தினசரி வாழ்க்கை


விரைந்து ஓடி மறையும்


நாட்களும் ...மாதங்களும்


நாளெல்லாம்


பறந்து...பறந்து களைத்துப் பின் கலைந்த பொழுதில்


அப்படியும் ருசித்திடுமே


அதிகாலைக் காபியும்


அமைதியான கிராமத்து வீடும்


எல்லாம் பாட்டி சொன்ன கதையாகி


இனி எப்போது ருசிப்போமோ ?


தயங்கித் தயங்கி யோசிக்க வைத்த


பாட்டியில்லாத

இந்த நாள்...!!!

Saturday, November 1, 2008

அன்றும் இன்றும் மறந்து போன விளையாட்டுக்கள்












ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளில் பரவலாக எல்லோராலும் விரும்பப் பட்டு இன்று அரிதாகி விட்ட சில விளையாட்டுக்கள் :-
கிட்டிப்புள்
கோலி
தாயம்
தட்டாங்கல்( இதை சொட்டாங்கல் என்றும் சொல்வார்கள் )
பாண்டி (இதை நொண்டி என்றும் கிராமப் புறங்களில் சொல்வார்கள்)
பச்சைக்குதிரை
ஆடுபுலி ஆட்டம்
கொலை கொலையாம் முந்திரிக்காய் (குலை குலையாம் என்பது தான் கொலை என்று திரிந்து விட்டிருக்கும்)
உதவி
கரண்டு (இதை
இன்று நகரத்தில் லாக் அண்ட் கீ என்கிறார்கள்)
இப்படிப் பல விளையாட்டுக்கள் நாங்கள் சின்ன வயதில் விளையாடியவை இன்று எங்கள் குழந்தைகளுக்கு அடையாளமே தெரியாமல் போய் விட்டன. இப்போதெல்லாம் வீடியோ கேம் ஆடுவதை விடவும் சிறுவர்கள் போகோ சேனல் ...ஜெடிக்ஸ் ...சுட்டி டிவி பார்ப்பதையே அதிகம் விரும்புகின்றனர் ,பார்க்கிலும் அப்படி ஒன்றும் ஓடி ஆடி விளையாடும் சிறுவர் சிறுமிகளைப் பார்க்க முடியவில்லை .சிலைடில்(சறுக்கு மரம் என்போமே அது தான் ) சறுக்குவது ஊஞ்சலில் குறுக்கும் மறுக்குமாக ஆடுவது (அந்தக் கால டயர் ஊஞ்சலுக்கு இவை எந்த விதத்திலும் ஈடில்லை என்று தான் எனக்குத் தோன்றுகிறது ..பிறருக்கு எப்படியோ !!!)மிஞ்சிப் போனால் சி சா (நம்ம ஊர் ஏற்றம் இறக்கம் தான் )இதில் ஒரு சுவாரஷ்யம் எங்கள் ஊரிலெல்லாம் மட்டு வண்டிகளில் மாடுகள் இளைப்பாற அவிழ்த்து விடப்பட்டால் போதும் உடனே ரெண்டு ரெண்டு பேராக ஓடிப்போய் ஆளுக்கு ஒரு பக்கம் நுகத்தடிக் கட்டையில் அமர்ந்து கொண்டு ;ஏலேலோ ஐலேசா ...ஏலேலோ ஐலேசா பாடிக் கொண்டே ஏற்றம் இறக்கம் ஆடுவோம் .அது ஒரு ஜாலி கேம் ,இப்போது இங்கிலீஷ் ரைம்ஸ் பாடிக் கொண்டே ஆடுகிறார்கள் (ஏதோ பரவாயில்லை ) அந்தக் காலம் போல இது ஒரு பொன்மாலைப் பொழுது என்று பாடத்தான் முடியவில்லை .ஏதோ ஒப்புக்கு விளையாடுவதைப் போல இருக்கிறது இன்றைய விளையாட்டுக்கள் .




























மழை என்னை நனைத்தது ,நான் மழையில் நனைந்தேன் ...!!!


மழை என்னை நனைத்தது

இல்லை


நான் மழையில் நனைந்தேன் ;


சொட்டுச் சொட்டாய்


பட்டுத் தெறித்தது


எப்போது


வெட்டி முறிக்கும்


விரி மழையானதோ ?


தூறலும் சாரலும்


முற்றி முதிர்ந்திட


காடதிரும் கவின்மழை


குளிரக் குளிர மழை


யாருமில்லா அத்துவான பூமி


தூரத் தெரியா வீடு


கண் மறைத்த


வேகம் கொண்ட மழை


எப்போது வீட்டுக்குப் போவது ?


பயப் பந்து உருண்டோடும் பசித்த வயிறு


இந்நேரம் ஏனிங்கு வந்தேன் ?


என்னை நான் பழித்திட்டும்


நிற்காத பெருமழை


தரை தெரியாக் கனமழை


எப்போது ஓயுமோ ?


காத்திருக்கிறேன் ...!


மலைகளால் குத்தகைக்கு எடுக்கப்பட்ட


மேகத்தின் அடிவாரத்தில்


தட்டாம் பூச்சிகளின்


வட்ட ரீங்காரம் கண்டு


கட்டுப்பாடற்ற சுதந்திரத்தோடு


அவை சுற்றிப் பறக்கும்


மட்டற்ற ஆனந்தம் தொற்றிக்கொண்டு


எல்லாம் மறந்து


நின்று கொண்டிருக்கும் போது தான்


மழை என்னை நனைத்தது


இல்லை


நான் மழையில் நனைந்தேன் ;


சொட்டுச் சொட்டாய்


பட்டுத் தெறித்தது


எப்போது


வெட்டி முறிக்கும்


விரி மழையானதோ ?


தூறலும் சாரலும்


முற்றி முதிர்ந்திட


காடதிரும் கவின்மழை


குளிரக் குளிர மழை


யாருமில்லா அத்துவான பூமி


தூரத் தெரியா வீடு


கண் மறைத்த வேகம் கொண்ட மழை


எப்போது வீட்டுக்குப் போவது ?


பயப் பந்து உருண்டோடும் பசித்த வயிறு


இந்நேரம் ஏனிங்கு வந்தேன் ?


என்னை நான் பழித்திட்டும்


நிற்காத பெருமழை


தரை தெரியாக் கனமழை


எப்போது ஓயுமோ ?


காத்திருக்கிறேன் ...!


மலைகளால் குத்தகைக்கு எடுக்கப்பட்ட


மேகத்தின் அடிவாரத்தில்


தட்டாம் பூச்சிகளின்


வட்ட ரீங்காரம் கண்டு


கட்டுப்பாடற்ற சுதந்திரத்தோடு


அவை சுற்றிப் பறக்கும்


மட்டற்ற ஆனந்தம் தொற்றிக்கொண்டு


எல்லாம் மறந்து


நின்று கொண்டிருக்கும் போது தான்


மழை என்னை நனைத்தது


இல்லை


நான் மழையில் நனைந்தேன் ;


சொட்டுச் சொட்டாய் பட்டுத் தெறித்தது


எந்நேரம் வெட்டி முறிக்கும்


விரி மழையானதோ ?


தூறலும் சாரலும்


முற்றி முதிர்ந்திட


காடதிரும் கவின்மழை


குளிரக் குளிர மழை


யாருமில்லா அத்துவான பூமி


தூரத் தெரியா வீடு


கண் மறைத்த வேகம் கொண்ட மழை


எப்போது வீட்டுக்குப் போவது ?


பயப் பந்து உருண்டோடும் பசித்த வயிறு


இந்நேரம் ஏனிங்கு வந்தேன் ?


என்னை நான் பழித்திட்டும்


நிற்காத பெருமழை


தரை தெரியாக் கனமழை


எப்போது ஓயுமோ ?


காத்திருக்கிறேன் ...!


----------------------------------------------------------------------(மீண்டும்...மீண்டும்)


பரணி