
எங்கேயோ புறப்பட்டவளாய்த் தான் ரங்கா என்கிற ரங்கநாயகி இங்கே வந்து இந்த சுடு வெயிலில் நின்று கொண்டிருக்கிறாள் இந்நேரம் ,
ஏன் ...ஏன் ...எதற்கு இவள் இப்படி நிற்கிறாள்?
என்று கடந்து போனவர்கள் எல்லோரும் கேட்டுக் கொண்டே போய்க் கொண்டு இருந்தார்கள் .அவள் மட்டும் இடம் மாறாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தாள் .
ரங்கா ...ஏய் ரங்கா யாரோ அழைப்பது அங்கே அப்போதிருந்த எல்லோருக்குமே கேட்டது .அவளுக்கும் கேட்டிருக்கும் ...அவள் காது கேட்காதவள் அல்லவே !
எனக்கு ரங்காவை கொஞ்ச நாளாய் தெரியும் ,முதல் முறை அவளைப் பார்க்கும் போது எனக்கு ஒன்றும் தோன்றவில்லை .இரண்டாம் முறை...மூன்றாம் முறை ...ஏன் பலமுறை பார்த்திருந்த போதிலும் அவளைப் பற்றி பெரிதாய் ஒன்றுமே நினைக்கத் தோன்றியதே இல்லை .
இன்றைக்கு காலையில் தான் திடீரென்று இவளைப் பற்றி நினைத்துக் கொண்டேன் , அவளிருந்த கிராமத்தில் நான் இருந்தேன் என்பது ஒன்று மட்டும் தான் அதுவரை எங்களுக்கிடையில் இருந்த ஒரே ஒரு பந்தம் .
அந்த கிராமத்தில் எங்களைத் தவிரவும் நிறையப் பேர் இருக்கத்தான் செய்தார்கள் .
எல்லோருக்கும் என்னைத் தெரிந்தே இருந்தது .அந்த ஊரின் ஒரே ஒரு அரசாங்க டாக்டர் என்ற முறையில் என்னை தெரிந்தே வைத்திருந்தார்கள் . நேற்று மாமா வந்து விட்டுப் போயிருந்தார் .எனகேற்ற டாக்டர் பெண் வரன் நேற்று தான் தகைந்ததாம் ...
அலுப்பு தீர்ந்த மகிழ்வோடு அந்தப் பெண்ணின் புகைப்படம் இன்ன பிற தகவல் சொல்லி விட்டு உடனே ஊருக்குப் போயே ஆக வேண்டும் என்றார் இதோ இப்போது அவரை பஸ் ஏற்றி விடத்தான் மத்தியான நிறை வெயிலில் இருவரும் பஸ் ஸ்டாண்டில் நிற்கிறோம் .
ரங்கா தன்னைச் சுற்றிலும் யாருமே இல்லாததைப் போல் பாவித்தவளாய் சின்னக் குரலில் இப்போது பாட ஆரம்பித்திருந்தாள்.அது ஏதோ புரியாத பாஷை தமிழாய் இருக்க வாய்ப்பில்லை ...அர்த்தமே புரியவில்லை ..ஆனால் தமிழ் பாட்டைப் போலவே இருந்தது அதன் ஓசை நயம் ,
மட்டை வெயிலில் மண்டை காய்ந்தது எனக்கு ,மாமா ரங்காவைப் பார்த்து ;மாப்ள 'என்ன இந்தப் புள்ளக்கி பைத்தியமா ' என்றார் என்னிடம் நான் தெரியாது என்பதாய் உதட்டை பிதுக்கி தலையை ஆட்டினேன் .
அந்த ஊருக்கு அடிக்கடி பஸ் உண்டு ,இது சாப்பாட்டு நேரம் ...ஒரு பஸ்சையும் காணோம் ...
வரும் ...ஆனால் வராது கணக்காய் நாங்கள் காத்திருந்தோம் .ரங்காவின் அம்மா வந்து அவளைப் பிடித்து இழுத்தாள்,என்னம்மா ரங்கா இப்பிடிப் போய் நாடு ரோட்ல நின்னுகிட்டு இருக்க ..வாம்மா வீட்டுக்குப் போலாம் ...ரங்கா தன் காலைத் தூக்கிக் காட்டி விட்டு மறுபடி நாடு ரோட்டில் நின்று கொண்டாள்(செருப்பு போட்டிருக்கிராளாம்)
அம்மா தன் சேலைத் தலைப்பை முக்காடு இட்டவாறு ரங்காவுக்கு துணையாய் அங்கே நிற்க சங்கடப்படாமல் மறுபடி அவளிடம் வாம்மா இனி நாளைக்கு வந்து நிப்பியாம் ...இன்னைக்குப் போதும் ..ரொம்ப வெயில் ஏறுது பாரு ..வாடா போலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தாள் .
மாமா அதிசயித்துப் போய் என்னைப் பார்த்தார் ,என்ன மாப்ள இது கூத்து .தெனம் இந்தப் புள்ள இப்பிடித்தான் இங்க நிக்குமா என்றார் என்னிடம் ,
மாமா கேட்டது போல நானும் இந்த ஊருக்கு வந்த புதிதில் சிலரிடம் இப்படிக் கேட்டிருக்கிறேன் தானே.
ஒரு இருபத்து ஐந்து வயதுப் பெண் இந்நேரம் மேற்படிப்பு படிக்கப் போயிருக்க வேண்டும் இல்லாவிட்டால் கல்யாணமாகி புருஷன் வீட்டில் குழந்தையை சீராட்டிக் கொண்டிருக்க வேண்டிய பெண் இப்படி ஒரு ரெண்டும் கெட்டான் கிராமத்தில் நட்ட நடு ரோட்டில் மட்ட மத்தியான சூட்டு வெயிலில் எங்கேயோ வெளியூர் போன புருஷனை வரவேற்க வந்தவள் போல அதீதமான அலங்காரத்தோடு அத்தனை பேர் நிற்கும் பஸ் ஸ்டாண்டில் வந்து தினமும் நிற்பானேன் !!!.
பொண்ணுக்கு கொஞ்சம் புத்தி சுவாதீனம் இல்லையோ ...? ஏனோ இதை யாரிடமும் கேட்டதில்லை நான் ,வந்த நாள் முதல் இந்த நாள் வரை அவளை நான் பலமுறை பார்க்க நேரிட்டும் அதென்னவோ இதொன்றும் மனதில் பதியவே இல்லை .எப்போது சென்னைக்கு டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு ஓடுவோம் என்ற முனைப்பில் அவளைப் பற்றி யோசிக்கவோ கேள்வி கேட்கவோ எனக்கு தோன்றியதே இல்லை .
ஒரு வழியாய் பஸ் வரவே மாமா புறப்பட்டுப் போனார் .
ரங்கா அங்கேயே தான் தொடர்ந்து நின்றுகொண்டே இருந்தாள்.அவள் அப்படித் தான் !!!அவளுக்காய் எப்போது அலுக்கிறதோ அப்போது அவளாய் போய் விடுவாள் . பாதுகாப்பான பைத்தியம் தான் போல என்று பல நாட்களைப் போல இன்றும் நினைத்தவாறு நான் என் வீட்டை நோக்கி நடந்தேன் .
மாமா கொடுத்து விட்டுப் போன அந்தப் பெண்ணின் புகைப்படத்தை காலையில் சரியாகப் பார்க்கவே இல்லையே என்று நானாய் நினைத்துக் கொண்டு மறுபடி அதைக் கையில் எடுத்தவாறு கட்டிலில் சாய்ந்தேன் .நன்றாகத் தான் இருந்தாள்
அழகாய் பார்க்க கண்ணுக்கு லட்சணமாய் மஞ்சள் வளையங்களிட்ட இளம்பச்சை நிற பெங்கால் காட்டன் புடவை உடுத்தி இருந்தாள் .
ரங்கா என்ன நிறப் புடவை இன்று உடுத்திக் கொண்டிருந்தாள் ?
மனம் ரங்காவின் பின் ஓட அதை ஒதுக்கி விட்டு ,
மாமா பெயர் என்ன சொன்னார்..? ம்ம்ம் ...ம்ம் ... சத்யாவோ ...நித்யாவோ ?ரெண்டுமே நல்ல பெயர் தான் ,
ரங்கநாயகி ...ரங்கா கூட நல்ல பேர் தானே ...!!!சரி ..சரி இப்போதென்ன ரங்காவைப் பற்றி ?
நல்ல அடர்த்தியான தலை முடி சத்யாவுக்கு ...இல்லை நித்யாவுக்கு !!!ரங்காவுக்கும் தான் ஆனால் அதில் அவள் பூச்சூடி நான் கண்டதே இல்லை ஒருநாளும் ...;
பெண் பிடித்திருக்கிறது என்று அம்மாவிடம் போனில் இன்றைக்கே சொல்லி விட வேண்டியது தான் ,டாக்டர் என்பதால் பிரச்சினையே இல்லை ,ரெண்டு பேருக்கும் எப்படியோ ஒத்துப் போய் விடும் ,அவளோ இல்லாவிட்டால் நானோ விட்டுக் கொடுத்து வாழ்ந்து கொள்ள வேண்டியது தான் ...(எதை விட்டுக் கொடுப்பது ?
மனம் கேள்வி எழுப்ப அந்நேரமே அதை ஒரே அமுக்காய் அமுக்கிக் கொன்றேன் ..கேள்வியே கேட்காதே ,இது அதற்கான நேரமே அல்ல )எனக்கு கொஞ்சம் செலக்டிவ் அம்னீசியா ...அடிக்கடி சிலவற்றை மறந்து போய்விடுவேன்,
இப்படியும் கூட சொல்லலாம் ...மறந்து போக வேண்டும் என நினைத்து ஒதுக்கியதை நான் மறுபடி நினைப்பதில்லை என்று
அப்படித் தான் ...
அப்படித் தான் ...
ரங்காவையும் நான் மறந்து விட்டிருந்தேன் ,
எனக்கு இதுவரை ஏழெட்டு இடங்களில் பெண் பார்த்திருப்போம் .
யாரையும் நேரில் சென்றெல்லாம் பார்த்ததில்லை .பேச்சு வார்த்தை முடிந்து எல்லாம் சரி என்று இரண்டு தரப்பிலும் முடிவான பின் தான் நான் நேரில் பெண்ணைப் பார்க்க வருவேன் என்று அம்மாவிடம் முடிவாகச் சொல்லி இருந்தேன் .
அம்மாவும் சரி என்றிருந்தாள்.அப்படி நான் போட்டோவில் பார்த்த முதல் பெண் .
"ரங்கா ...என்கிற ரங்கநாயகி "
No comments:
Post a Comment