Sunday, November 30, 2008

குன்று குளிர் கூதிர் காலம் ...?!


குன்று
குளிர்
கூதிர்காலம்...
எங்கேயோ எப்போதோ
படித்தது
படித்ததில்
எனக்கே தெரியாமல்
பிடித்துப் போனதோ என்னவோ?
இன்று
சட்டென ஞாபகத்தில் நெருடியது
தொடரும் பயணங்களில்
இப்படி சில நெருடுவதும்
மனதை வருடுவதும்
நல்லதற்கா ?
கெட்டதற்கா ?
யாரிடம் போய்க் கேட்பதோ?
யாரோ சொன்னார்கள்...
பேருந்தில்
ஜன்னலோர
இருக்கை
ரொம்பவே சௌகர்யம் என்று;
மார்கழிக் குளிரில்
அதிகாலை ஐந்து மணிக்கு
ஜன்னலோரம்
பற்கள் சதிராட
உட்கார்ந்து பாருங்கள்
நொந்து கொள்ளலாம் இவ்வுலகை
இன்னொருமுறை...
குன்றையும் குளிர்விக்கும் கூதிர்காலம் ...
இத்தனைக்கும் நடுவில்
கடைசி இருக்கையில்
தாயின் கதகதப்பில்
மறுபடி கருப்பையில்
நுழைந்து விட்ட கனவுகளுடன்
மூடிய கண்ணிமையின்
கீழ்
காய்ந்தும் காயாத
கண்ணீர் கோடுகளோடு
கிழிந்து போன
புடவைத் தலைப்பில்
சுற்றப் பட்டு
நிம்மதியாய்த் துயிலும்
ஒற்றைக் குழந்தை
என்னுள்
இருட்டு வீட்டின்
குருட்டு அறையில்
முரட்டுக் கம்பளி
போர்த்திக் கொண்டு
உடல் குறுக்கி
நீண்டு உறங்கும் ஆசையை
ஏராளமாய்த் தூண்டி விட்டது ;
அடாடா...
இது
குன்றும் குளிரும் கூதிர் காலமன்றோ !!!
குளிர் பழகிப் போகும்
என்பதெல்லாம்
நம்மை நாமே
ஏமாற்றிக் கொள்ளும்
கணநேர சமாதானமே !!!
வெயிலின்
ஸ்பரிசம் பட்ட
அடுத்த நொடியில்
ஏக்கம் மட்டுமே
மிஞ்சி நிற்கலாம் ?!
இத்தனைக்கும் நடுவில்
கள்ளமின்றி தூங்கிப் போன
செல்லக் குழந்தையின்
பட்டுக் கன்னமேட்டில்
துடைக்கப் படாமல்
எஞ்சி நின்ற
ஒற்றைக் கண்ணீர்த் துளியை
எழு மணிச் சூரியன்
வந்து
சட்டென
சுடர் விட்டு
வைரமாய் ஜொலிக்க வைத்ததும்
கொள்ளை அழகில்
மனம் உருகி நின்ற
அந்த நொடியில்
உடலும் கூட
சூடாகி
வெது வெதுப்பானது
இது ஒரு வகை இன்பமோ?!
அந்தரத்தில் இன்பக் கயிற்றில்
உல்லாச நடை பயிலும்
சந்தோஷ நிமிடங்களில்
எதற்கோ பட்டெனக் கயிறு
அறுந்து
விழுந்த இடமோ
நட்ட நாடு ரோடு
பிய்ந்து போன தலையோடு
உடல் பின்னப் பட்டுப் போன
குட்டி நாயின்
துடிக்கும் உடலருகே
மனம் உறைந்து நின்ற
இந்த நொடியில்
மறுபடி
குளிர் தீண்ட
மனம்
விறைத்து உறைந்தது ...
இது ஒரு வகை துன்பமோ?!
நொடிக்கு நொடி
உருகுவதா?
உறைவதா?
என்ற
எல்லையில்லா குழப்பத்தோடு
உறைந்து போன குன்றிலிருந்து
புகைந்து புகைந்து
நெகிழ வைக்கும்
வெயிலைத் தேடி
ஓரமாய்
ஒதுங்கி ஒதுங்கி
மறைந்து போனது
ஏதோ ஒன்று
அது என்னவோ !?
குன்றைக் குளிர வைத்த கூதிரோ !?

No comments: